பக்கம்:பொன் விலங்கு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 35

பிரின்ஸிபல் உட்கார்ந்திருந்த பக்கமாகத் திரும்பி அவர் முகத்தைப் பார்த்தார். அந்த முகத்தில் அப்போது எந்த விதமான அதிருப்தியும் இல்லை என்பதைப் பூபதி அவர்கள் புரிந்துகொள்ள முடிந்தது. பூபதியும் கல்லூரி முதல்வரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் குறிப்பினால் பேசிக் கொண்டிருந்த அந்தச் சில கணங்களில் சத்தியமூர்த்தி எதிர்ப்புறம் நின்றுகொண்டிருந்த பாரதியைப் பார்த்தான். அவளும் அப்போது அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின்பு சிறிது நேரம் கழித்து உள்ளே போய் அவுன்ஸ் கிளாஸில் ஏதோ மருந்துடன் தந்தைக்கு அருகில் வந்து, "அப்பா மருந்து சாப்பிடுகிற நேரமாயிற்று' என்று கையில் கொண்டு வந்திருந்த மருந்தைத் தந்தைக்கு முன் மேஜையில் வைத்தாள் அந்தப் பெண்.

அவுன்ஸ் கிளாஸை எடுத்து மருத்தைக் குடித்துவிட்டு அந்த மருந்தின் சுவை விளைவித்த உணர்ச்சிகளினால் முகத்தைச் சிலிர்த்துக்கொண்டு கண்களில் நீரரும்பிடச் சில கணங்கள் மோட்டு வளைவை வெறித்துப் பார்த்தார் பூபதி.

ஒரு கனைப்புக் கனைத்துத் தொண்டையைச் சரி செய்து கொண்டு மறுபடியும் அவர் சத்தியமூர்த்தியிடம் பேசத் தொடங்கிய போது, சுவர்க்கடிகாரத்தில் பன்னிரண்டு மணி அடித்தது. அந்த மணியோசையைக் கேட்டுத் தம் மணிக்கட்டிலிருந்த கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டுப் பூபதியின் முகத்தையும் பார்த்தார் கல்லூரி முதல்வர். பூபதியும் அந்தக் குறிப்பைப் புரிந்து கொண்டவர் போல், "ஓ! உங்களுக்கு நேரமாகி விட்டதல்லவா? நீங்கள் புறப்படலாம். இதோ இவருடைய விண்ணப்பம். இதைக் கொண்டுபோய் மேலே ஆக வேண்டியதைச் செய்யுங்கள். நான் இவரோடு இன்னும் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் அனுப்புகிறேன்' என்று சொல்லிக்கொண்டே அந்த விண்ணப்பத்தின் பின்பக்கமாக ஏதோ குறிப்பு எழுதி அதை முதல்வரிடம் கொடுத்தார் பூபதி. பிரின்ஸிபல் அதைக் கையில் வாங்கிக் கொண்டு அவரிடமும் சத்தியமூர்த்தியிடமும் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

பிரின்ஸிபல் புறப்பட்டுப்போன சிறிது நேரத்திற்கெல்லாம் பூபதியின் மகள் பாரதியும் வீட்டின் உட்புறமாகச் சென்றுவிட்டாள். முன் பக்கத்து அறையில் சத்தியமூர்த்தியும், பூபதியும் தனியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/37&oldid=595586" இலிருந்து மீள்விக்கப்பட்டது