பக்கம்:பொன் விலங்கு.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.08 பொன் விலங்கு

"மேளம் கொட்டாமல் நாதஸ்வரம் வாசிக்காமல் அந்த அதிகாலை நேரத்தில் ஒடும் ரயிலில் பாணிக்கிரணம் செய்து கொண்டதுபோல் என் வலது கையைப் பிடித்து இழுத்தீர்களே..." என்ற இனிய குரல் இப்போதும் இன்னும்கூட அவன் காதருகே ஒலித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றியது.

ஆஸ்பத்திரியின் அருகே பஸ்ஸிலிருந்து இறங்கி உள்ளே சென்றபோது முன்பக்கம் வரிசையாக நின்றிருந்த கார்களைப் பார்த்துக்கொண்டே நடந்த குமரப்பன், 'கண்ணாயிரமும் மஞ்சள்பட்டியாரும் கூடவந்திருக்கிறார்கள் போலிருக்கிறது. இதோ அவர்களுடைய கார்கள் அடுத்தடுத்து நிற்கின்றன பார்!" என்றான். மஞ்சள்பட்டி ஜமீன்தாருடைய மிகப் பெரிய காடிலாக் காரும் அதனருகே கண்ணாயிரத்தின் சின்னஞ்சிறிய காரும் அங்கு அப்போது நின்றுகொண்டிருந்தன. மோகினி அநுமதிக்கப்பட்டிருந்த ஸ்பெஷல் வார்டு அறையின் முன்புறம் கூட்டம் அதிகமாயிருந்தது. அறையின் முகப்பில் இருந்த நாற்காலிகளில் பழக் கூடைகள், ஹார்லிக்ஸ் பாட்டில் சகிதம் ஜமீன்தாரும், கண்ணாயிரமும் அட்டகாசமாக உட்கார்ந்திருந்தார்கள். இன்னும் சிறிது தள்ளி மேஜைக்கருகே ஒரு சிறிய ஸ்டூலில் நர்ஸ் ஒருத்தி அமர்ந்திருந்தாள். அறைக்குள் நுழையத் தயங்கினான் சத்தியமூர்த்தி. உள்ளே போய் மோகினியைப் பார்ப்பதற்கு அவன் கால்களும் மனமும் துடித்தாலும் பின்புறம் காவல் நாய்களைப் போல் உட்கார்ந்து கொண்டு முறைத்துப் பார்த்த ஜமீன்தாரையும் கண்ணாயிரத்தையும் கண்டு தயங்கினான். நர்ஸ் வந்து ஏதோ விசாரித்தாள். அதற்கும் குமரப்பன்தான் பதில் கூறினான். 'தயங்காமல் உள்ளே வாடா சத்தியம்! இந்தப்பாவிகள் இங்கே இருக்கிறார்கள் என்பதற்காக.நீயும் நானும் எதற்காகத் தயங்க வேண்டும்? பேசாமல் என் பின்னால் வா...சொல்கிறேன்' என்று ஸ்கிரீன் வைத்து மறைத்திருந்த மறுபுறத்துக்கு அவனை அழைத்துச்சென்றான் குமரப்பன். கட்டிலில் படுத்திருந்த மோகினி நல்ல வேளையாக அப்போது விழித்துக்கொண்டுதான் இருந்தாள். அவளுடைய நெற்றியிலும், மோவாயிலுமாக இரண்டு மூன்று பிளாஸ்திரி ஒட்டுக்கள் போடப்பட்டிருந்தன. அவளுடைய அழகிய கண்கள் இரண்டும் அழுது அழுது இரத்தம் கன்றிச் சிவந்திருந்தன. முகம் கறுத்து வாடியிருந்தது. திடீரென்று தன் கட்டிலருகே சத்தியமூர்த்தியைப் பார்த்ததும் அவளுக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/410&oldid=595653" இலிருந்து மீள்விக்கப்பட்டது