பக்கம்:பொன் விலங்கு.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 பொன் விலங்கு

ஜமீன்தாரோடும், கண்ணாயிரத்தோடும் சண்டைபோட நேர்ந்த காரணத்தைக் குமரப்பனிடம் அருகில் நெருங்கி விசாரித்தான் சத்தியமூர்த்தி. சத்தியமூர்த்தி அதை எவ்வளவுக்கு எவ்வளவு மெதுவான குரலில் விசாரித்தானோ அவ்வளவுக்கு அவ்வளவு இரைந்த குரலில் குமரப்பனிடமிருந்து பதில் வந்தது.

"அப்போதிலிருந்து நானும் பார்த்துக்கொண்டேஇருக்கிறேனடா சத்தியம்! பொறுமைக்கும் ஒர் எல்லை உண்டல்லவா? பத்து நிமிஷத்துக்கு ஒருதரம் அந்த நர்ஸைக் கூப்பிட்டு உள்ளே பேசிக் கொண்டிருக்கிற ஆளை வெளியே போகச் சொல்லு என்று இவர்கள் தூண்டிக் கொண்டிருக்கிறார்கள். வார்டுலே கட்டுக்காவல் ஒன்றுமே கிடையாதா? கண்ட காலிப் பயல்கள் எல்லாம் உள்ளே போய்ப் பேசிக்கிட்டிருக்கானுகளே கேள்வி முறை இல்லையா? என்று இதோ அமர்ந்திருக்கிறார்களே, இந்த மேன்மை தங்கிய ஜமீன்தாரவர்கள் சிறிது நேரத்துக்கு முன் என்காதிலும் விழும்படி கண்ணாயிரத்திடம் திருவாய் மலர்ந்தருளினார். அதுவர்ைபொறுமையாயிருந்த என்னால் உன்னையும் என்னையும் 'காலிப்பயல்களாக வருணித்ததைக் கேட்ட பின்பும் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. 'காலிப்பயல்’ என்று இன்னொருவனைத் திட்ட வேண்டுமானால் அப்படித் திட்டுகிறவனுக்கும் அதற்கு ஒரு யோக்கியதை வேண்டுமல்லவா?" என்று குமரப்பன் ஆத்திரமாகவும், ஆவேசமாகவும் கூறிய பதில் சத்தியமூர்த்திக்கும் உட்புறம் மோகினிக்கும் வெளியே கூடியிருந்த கூட்டத்துக்கும் ஜமீன்தாருக்கும், கண்ணாயிரத்துக்கும் எல்லாருக்குமே தாராளமாகக் கேட்கிற இடிமுழக்கக் குரலாக இருந்தது.

'ஓகோ ஜமீன்தார் அவர்கள் அவசரமாக உள்ளே போய்ப் பார்த்துப் பேச வேண்டும் போலிருக்கிறது. நாம் அதற்கு குறுக்கே நிற்பானேன்? மறுபடியும் மாலையில் வந்து பார்த்துக் கொள்ளலாம். ஒரு நிமிஷம் இரு. உள்ளே போய் சொல்லிக்கொண்டு வந்துவிடுகிறேன்" என்று அலட்சியமாக ஜமீன்தார் பக்கம் ஒரு பார்வை பார்த்தபின் குமரப்பனிடம் கூறிவிட்டுச் சத்தியமூர்த்தி உட்புறம் சென்றான். படுக்கையில் சாய்ந்தாற்போல் உட்கார்ந்திருந்த மோகினி கன்னத்தில் கையூன்றியபடி மெல்ல அழுது கொண்டிருந்தாள். அவன் பரிவுடன் அவளருகே சென்று கேட்டான். "ஏன் அழுகிறாய் மோகினி?" -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/416&oldid=595659" இலிருந்து மீள்விக்கப்பட்டது