பக்கம்:பொன் விலங்கு.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

478 பொன் விலங்கு

"சாரோ சாரு உங்களைத்தானே? உங்களுக்கு ஏன் இல்லாத வம்பெல்லாம்?-உலகத்திலே-இந்தப் பாழாப் போன உலகத்திலே இப்பிடிரொம்ப நாளாரொம்ப அநாதைங்க அழுதுகிட்டிருக்குதுங்க. சாமிக்குக் காதிருந்து கேட்டுக் கண் திறந்தால்தான் இவர்களுக்கு விடிவு உண்டு. மோகினி'ன்னு கிளியாட்டமா இந்த ஊர்லே ஒரு டான்ஸ்காரப் பொண்ணு இருக்குதே-அதான் சார்-அந்தப் பொண்ணோட அம்மாக்காரிக்கூடக் கொஞ்சம் நாளைக்கு முன்னே கார் விபத்துலே செத்துவச்சாளே அந்தப் பொண்ண இங்கே...கொண்டாந்து தங்க வச்சிருக்கார் எங்க ஜமீன்தார்.ரொம்ப நாசூக்காகச் சொல்லணுமானா ஜெயில் இருக்குதே ஜெயில், அதிலே கைதியை பிடிச்சுவச்சமாதிரி வச்சிருக்காரு... அந்தப் பெண்ணுக்குத் துணையாயிருக்கணும்கிற பேரிலே ஒரு ஆயாக் கிழவியையும் காவலா போட்டிருக்காரு. உள்ளே எட்டிப் பாரு சார். எங்கியாவது இந்த அநியாயம் நடக்குமா? அந்தப் பொண்ணு தலைவிரி கோலமாகக் கீழே தரையிலே கிடக்கிற வீணையிலேயும் தம்புராவிலேயும் தலையை மோதிக்கிட்டுக் கதறிக்கதறி அழுவது. ஆயாக் கிழவியோ ஜமீன்தாருக்குப் பயந்து கிளியைக் கூட்டிலே பிடிச்சி அடைச்ச மாதிரி அந்தப் பொண்ணை உள்ளார வச்சுக் கதவையே பூட்டிப்புட்டா. ரொம்ப தங்கமான பொண்ணு சார். அசோக வனத்துலே சீதையைக் கொண்டாந்து வச்ச மாதிரி எங்க ஜமீன்தாரு இந்தப் பொண்ணை இங்கே கொண்டாந்து வச்சிருக்காரு..." என்று கூறிக்கொண்டே மாளிகையின் முன்புறம் பூட்டப்பட்ட அறையின் திறந்த ஜன்னலருகே சத்தியமூர்த்தியை அழைத்துக் கொண்டு போய்க் காண்பித்தான் தோட்டக்காரன். உயிருள்ள மங்கல வாத்தியமொன்று உயிரில்லாத மர வாத்தியங்களைத் தழுவியபடியே தாங்க முடியாத சோகத்தால் தளர்ந்து துவண்டு கிடப்பதைச் சத்தியமூர்த்தி அப்போது அந்த அறைக்குள் பார்த்தான்.மோகினி தலைவிரி கோலமாகக் கிடந்தாள். அவளுடைய மூடிய கண்களிலிருந்து மாலை மாலையாகக் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. அவனுடைய வாத்தியம்-அவனுக்கு ஆத்ம சமர்ப்பணமான பரிசுத்த வாத்தியம் அங்கே சிறைப்பட்டு அழுதுகொண்டிருப்பதை அவன் தன் கண்களாலேயே கண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/480&oldid=595730" இலிருந்து மீள்விக்கப்பட்டது