பக்கம்:பொன் விலங்கு.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 - பொன் விலங்கு

சத்தியமூர்த்தி சுவரில் படங்களாக இருந்த மேதைகளின் ஒளி நிறைந்த கண்களை நோக்கத் தொடங்கினான். இந்த நாட்டில் பிறரை அதிகார வெறியோடு அடக்கியாள்வதில் மகிழ்ச்சியடையக் கூடிய எத்தனையோ அற்பர்களுடைய அறையில் இப்படித்தான் நீங்களெல்லாம் படங்களாகத் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். பாவம்' என்று நினைக்கத் தோன்றியது அவனுக்கு. இப்போது மேஜையிலிருந்த டெலிபோன் மணி அடித்தது. பிரின்ஸிபால் எழுதிக் கொண்டிருப்பதிலிருந்து விடுபட்டு டெலிபோனை எடுத்தார். சத்தியமூர்த்தியை அப்போது அங்கே எதிரே வைத்துக் கொண்டு பேசுவதற்குச் சிரமப்பட்டார் அவர். மிக அருகில் இருந்ததனால் டெலிபோனில் எதிர்ப்புறமிருந்து ஒலித்த குரலை அவனும் ஓரளவு கேட்க முடிந்தது. மஞ்சள்பட்டியாரின் குரல்தான் அது முன்னும் பின்னம் தொடர்பில்லாமல் காதிற் விழுந்தாலும்'பயலைத் தொலைத்துக் கட்டிவிட்டு மறுகாரியம் பாருங்க என்று எதிர்பக்கமிருந்து டெலிபோனைக் கீழே வைப்பதற்கு முன் இரைந்து ஒலித்த வாக்கியம் அவனுக்கு நன்றாகக் கேட்டது. டெலிபோனைக் கீழே ரெஸ்டில் வைத்துவிட்டு, எழுதிக் கொண்டிருந்த காகிதங்களையும் அடுக்கி டிராயரில் போட்டபின் மேஜை மேல் இருந்த 'பைல் கட்டுகளை இங்கும் அங்குமாக இரண்டு முறை நகர்த்தியும் முடிந்த பிறகு அவனை விசாரிப்பதற்குத் தயாராகி விட்டவர்போல் ஒரு கனைப்புக் கனைத்து விட்டுத் தலை நிமிர்ந்தார் பிரின்ஸிபால். உடனே மணியடித்து அந்த மணிக்கு விடையாக வந்து நின்ற ஊழியனிடம் ஹெட்கிளார்க் வந்து நின்று கொண்ட பின் சிறிது நேரம் சத்தியமூர்த்தி இருந்த பக்கமே கவனிக்காமல்-அவன் அங்கு இருப்பதையும் மறந்துவிட்டார் போல் ஹெட்கிளார்க்கிடம் வேறு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். அப்புறம் சத்தியமூர்த்தியின் பக்கமாகத் திரும்பித் திடீரென்று அவர் பேச்சை ஆரம்பித்தபோது ஹெட்கிளார்க் வெளியேறாமல் தானாக அங்கு ஆணி அடித்தாற் போல் நின்று கொண்டது சத்தியமூர்த்திக்கு அநாகரிகமாகத் தோன்றியது. பிரின்ஸிபால் ஹெட்கிளார்க் அங்கு தன்னோடு உடனிருப்பதையே விரும்புவதுபோல் தெரிந்தது. பிரின்ஸிபாலும் பேசத் தொடங்கிவிட்டார்: . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/522&oldid=595777" இலிருந்து மீள்விக்கப்பட்டது