பக்கம்:பொன் விலங்கு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 53

தன் மனத்துக்கு மல்லிகைப் பந்தல் என்ற மலைநாட்டு நகரத்தின்மேல் எவ்வளவு மோகம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அங்கிருந்து பிரிந்து செல்லும் போதுதான் சத்தியமூர்த்தியால் உணரமுடிந்தது. மனத்தில் நிலைக்கும்படியான நிரந்தரமான சந்திப்புகள் எல்லாம் மகிழ்ச்சியில் தொடங்கி ஏக்கத்தில் முடிவதை அநுபவத்தில் பலமுறை உணர்ந்திருக்கிறான் அவன். பஸ்ஸில் திரும்பி வந்து கொண்டிருந்த போது மல்லிகைப் பந்தலில் அந்தச் சில மணி நேரங்களுக்குள் நடந்தவற்றை அவன் ஒவ்வொன்றாக நினைக்கத் தொடங்கினான். அப்படித் தொடங்கிய நினைப்பு வளர்ந்து பெருகி மிக நளினமானதொரு பகுதியில் வந்து நிறைந்தது. மல்லிகைப் பந்தலில் இருந்து புறப்படுவதற்கு முன்பாரதி சுட்டிக் காட்டிய ஈரச்செம்மண்நிலமும் அதைச்சுட்டிக்காண்பித்தபோது புதிய உணர்வோடு தெரிந்த முகமும் சத்தியமூர்த்தியின் நினைவில் சுற்றிச் சுற்றி வந்தன. வாய் திறந்து சொற்களால் பேச முடிவதைவிட அதிகமான நயமும் பொருளும் தந்து பேசுவதைப்போல் ஒலித்த அவள் கைகளின் வளை ஒலி இன்னும் அவன் செவிகளில் கேட்டுக் கொண்டேயிருந்தது. கம்மென்று நறுமணம் பரப்பி நாசியையும் இதயத்தையும் நிறைத்த அந்த மல்லிகைப் பூக்களின் வாசனையை இன்னும் அவனால் மறக்க முடியவில்லை. அவனுக்கு இருபுறமும் பஸ்ஸில் உட்கார்ந்தவர்கள் யாரோ தேயிலைத் தோட்டத்துக் கங்காணிகள்போல் தோன்றினார்கள். சதக் சதக்' என்று வெட்டப்படும் கொலைச் செய்திகளும் சினிமா நட்சத்திரங்களைப் பற்றிய பரபரப்பூட்டக்கூடிய விவரங்களும் அடங்கிய தினப்பத்திரிகை ஒன்றைப் படித்து ஒரு கங்காணி இன்னொரு கங்காணிக்குச் சொல்லிக்கொண்டிருந்தான். அந்தச் செய்தித் தாளின் பக்கங்களில் நடந்திருந்த கொலைகளைவிட அதைப் படித்துக் கொண்டிருந்தவன் செய்கிற கொலைக்காக மிகுந்த வேதனைப்பட்டான சத்தியமூர்த்தி. திரு.வி.க.வும் திலகரும் பத்திரிகை நடத்திய நாட்டில் மையை மெழுகிக் காகிதம் விற்பார் சிலரும், பொய்யை மெழுகி காகிதம் விற்பார் சிலருமாக புனிதமானதொரு பணியைச் சர்வசாதாரணமாக வியாபாரமாக நடத்துகிறவர்கள் பெருகியிருப்பதை எண்ணியபோது மிகவும் வருந்தினான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/55&oldid=595806" இலிருந்து மீள்விக்கப்பட்டது