பக்கம்:பொன் விலங்கு.pdf/609

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி - - 607

புரிந்திருந்தும் அந்தப் பேதைக்கு முன்னால் அவனே ஒன்றும் தெரியாததுபோல அப்போது நடிக்கத்தான் வேண்டியிருந்தது. அவள் வெளியேறிச் சென்ற பின்பு வகுப்பு அமைதியாக நடைபெற்று முடிந்தது. வெளியேறிச் சென்ற பாரதியோ கார் நிற்கும் இடத்துக்குப் போய் நேரே வீட்டுக்கு விடச் சொல்லிப் புறப்பட்டு விட்டாள். மாலையில் திரும்பும் அவள் கல்லூரிக்கு வரவேயில்லை.

சாயங்காலம் கல்லூரி விட்டதும்தான் பாரதி திரும்பி வருவாள் என்று நினைத்து அவள் திரும்ப வரும் வேளை இந்த விநாடியே உடனே வரக்கூடாதா என்னும் தவிப்போடு வீட்டில் காத்திருந்த மோகினி நண்பகலிலேயே அவள் திரும்பிவருவதையும் அவளுடைய கண்கள் அழுது அழுது சிவந்திருப்பதையும் பார்த்துத் திகைத்துப் போனாள். போர்டிகோவில் காரிலிருந்து இறங்கி உள்ளே நடந்துவந்த பாரதி தன் கையில் அடுக்கிக் கொண்டிருந்த புத்தகங்களில் இரண்டொன்று வருகிற வழியில் வரிசையாகநழுவிக் கீழே தரையில் விழுவதைக்கூட உணராமல் பிரமை பிடித்தவளாக நடந்து வருவதைப் பார்த்து மோகினிக்கு ஒன்றுமே புரியவில்லை. கையிலிருந்து நழுவி விழுகிற புத்தகங்களைப்போல அவளுடைய மனதிலிருந்து நழுவிக் கொண்டிருக்கிற உணர்வுகளை மோகினியால் புரிந்துகொள்ள முடிந்திருந்தால் பாரதியின் துயரத்துக்குக் காரணம் என்னவென்பதை ஒருவேளை அவளால் உணர்ந்து கொண்டிருக்க முடியுமோ என்னவோ?

"ஏன்? நீ காலேஜுக்குப் போகவில்லையா? பாதியிலேயே வந்துவிட்டாயா?. உடம்புக்கென்ன? பார்ப்பதற்கு என்னவோ போலிருக்கிறாயே?' என்று விசாரித்த மோகினிக்குப் பதில் சொல்லமுடியாமல் அவளருகே வந்து தயங்கி நின்றாள் பாரதி. இரண்டாம் முறையாகவும், இதே கேள்விகளை மோகினி பாரதியிடம் கேட்டபோது, "அவரை அறையிலேயே போய்ப் பார்த்து அந்தக் கடிதத்தைக் கொடுத்தாச்சு அக்கா!...எனக்கு ஒரே தலைவலியா இருக்கு.ஜூரமும் இலேசாக வந்திருக்கிறாற் போலத் தோன்றுகிறது." என்று அவள் தன்னைக் கேட்காத கேள்விக்கும் கேட்ட கேள்விகளுக்கும் சேர்த்தே மறுமொழி கூறினாள் பாரதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/609&oldid=595872" இலிருந்து மீள்விக்கப்பட்டது