பக்கம்:பொன் விலங்கு.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

630 பொன் விலங்கு

முகவரியைக் கொடுத்துவிடு. டெல்லியிலுள்ள ஜெர்மன் தூதராலயத்தில் விரைவில் உனக்கு 'இன்டர்வ்யூ நடைபெறும். இன்டர்வ்யூவில் நம்முடைய சென்னையைச் சேர்ந்த மொழியியற் பேராசிரியர் ஒருவரும் தேர்வாளராக இருப்பார். அவர் எனக்கு மிகவும் வேண்டியவர். நீ தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்று அவருக்கு நான் சிபாரிசு செய்து எழுதுகிறேன். இந்த மல்லிகைப் பந்தல் கல்லூரியில் உனக்கும் இவர்களுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டபின் நீ தொடர்ந்து இங்கு இருப்பது உன்னுடைய எதிர்காலத்துக்கு எந்த விதத்திலும் நல்லதில்லை. நான் சொல்லுகிற இந்த ஏற்பாட்டினால் உன்எதிர்காலமும் விரைவில் ஒளி பெறும். உன் வீட்டு வறுமையும் ஓரளவு குறையும். திரும்பும்போது இந்தியாவின் எந்தப் பெரிய பல்கலைக்கழகத்திலும் நல்லதொரு பேராசிரியர் பதவியைப் பெற ஏற்ற தகுதியோடும் டாக்டர் பட்டத்தோடும் நீ திரும்பலாம்" என்று கூறிவிட்டுப் போயிருந்தார். குமரப்பனுக்கும் அவருடைய இந்த யோசனை பிடித்திருந்தது. சத்தியமூர்த்தி மட்டும் சிறிது தயங்கினான். ஆனால் ஊர் சென்ற மறுநாளே கலெக்டர் அனுப்பிய விண்ணப்பங்களை மட்டும் தயங்காமல், அவர் கூறிய படியே பூர்த்தி செய்து அவன் டெல்லிக்கு அனுப்பி வைத்திருந்தான்.

அதன் தொடர்பாகத்தான் இன்று கலெக்டரிடமிருந்து அவசரமாகத் தந்தி வந்து அவனும் நண்பன் குமரப்பனும் உடனே மதுரைக்குப் புறப்பட்டிருந்தார்கள். பஸ்ஸில் போகும்போது குமரப்பன் பேச்சுப் போக்கில் சத்தியமூர்த்தியிடம் மோகினியைப் பற்றி ஏதோ சொல்லத் தொடங்கிய வேளையில், "வேறு ஏதாவது பேசு ஊரிலுள்ள நாட்டியக்காரிகளைப் பற்றியெல்லாம் நமக்கென்ன கவலை?" என்று சத்தியமூர்த்தி முகத்தைச் சுளித்து வெறுப்போடு மிகவும் கடுமையாகக் கூறியதைக் கண்டு அவனுடைய அந்த திடீர் மனமாறுதலுக்குக் காரணம் ஒன்றும் புரியாமல் குமரப்பன் திகைத்தான். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/632&oldid=595898" இலிருந்து மீள்விக்கப்பட்டது