பக்கம்:பொன் விலங்கு.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654 பொன் விலங்கு

தான் ஆசைப்பட்ட விருப்பத்தையும் அந்த விருப்பத்துக்கு அப்பால் காத்துக் கிடக்கும் வாழ்வையுமே இன்னொருத்திக்குப் பெருந்தன்மையாக விட்டுக் கொடுத்துவிட்டு அவளுக்கு - உதவியாகவும், காவலாகவும் வாழ்வது பற்றிச் சிந்தித்துக்

கொண்டிருந்தாள்.

'மேற்கு ஜெர்மனியிலுள்ள ஹிடல்பர்க் பல்கலைக் கழகத்திலும் மற்றும் சில ஜெர்மானியப் பல்கலைக்கழகங்களிலுமாக மொழியியல் ஆராய்ச்சித் துறையில் பணிபுரிவதற்காகச் சத்தியமூர்த்தி தேர்ந் தெடுக்கப்பட்டு விட்டாராம். இன்னும் பத்துப் பதினைந்து நாளில் அவர் பம்பாயிலிருந்து புறப்பட வேண்டுமாம். நாளை அல்லது நாளன்றைக்கு இங்கே நம் கல்லூரியில் அவர் தம்முடைய ராஜிநாமாவைக் கொடுத்து விடுவாரென்று தெரிகிறது. மாணவர்கள் ரொம்ப வருத்தத்தோடிருக்கிறார்கள். அவர் போவது உறுதிதானாம். வருகிற ஞாயிற்றுக்கிழமையன்று-மாணவ மாணவிகள் அவருக்கு ஒரு பிரிவுபசார விருந்துக்கு எற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த விருந்தைக்கூட கல்லூரி எல்லைக்குள் வைத்து நடத்தினால் அவர் விரும்புவாரோ விரும்ப மாட்டாரோ என்றெண்ணி லேக்வியூ ஹோட்டலில் நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்" என்று மறுநாள் மகேசுவரி தங்கரத்தினம் உறுதியாக வந்து தெரிவித்த செய்தியைக் கேட்டு ஏதோ வாய்விட்டுச் சொல்லமுடியாத ஊமைத் துயரத்தை உணர்ந்து பாரதி தவித்தாள். மோகினிக்கு இது தெரிந்தால் அவள் எங்கே மூர்ச்சையாகி விழுந்து விடுவாளோ என்று பயந்தாள் பாரதி. படிப்படியாக மோகினியின் மனத்தை மாற்றி அவளைத் தன்னுடையவளாக்கிக் கொண்டுவிடலாமென்ற ஆசையால், ஜமீன்தார் அவளோடு புதுப் பங்களாவில் குடியேறி வாழ்வதற்குத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார். பாரதி இவற்றை எல்லாம் மனத்தளவில் கடுமையாக வெறுத்தாலும் வெளிப்படையாக ஜமீன்தாரைக் கோவித்துக் கொள்ளவோ பகைத்துக் கொள்ளவோ கண்டிக்கவோ முடியாமல் இருந்தது. . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/656&oldid=595924" இலிருந்து மீள்விக்கப்பட்டது