பக்கம்:பொன் விலங்கு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 79

ஒப்பி ஆசைப்பட்டு நிறைவேறாமற்போன விருப்பங்கள் என்று எவையும் அந்த வீட்டில் அன்று வரை இருந்ததில்லை. அவள் நினைத்தது எதுவாயினும் அது அப்போதேநடக்க முடிந்த அளவுக்குச் செல்லமாகவும் சீராகவும் வளர்ந்திருக்கிறாள் அவள். இது நான் நினைப்பது போல் நடக்க முடியாதோ? என்று எதை நினைத்தும் நேற்றுவரை அவள் கவலைப்படநேர்ந்ததில்லை. அவள் நினைத்ததை நிறைவேற்றப் பணியாட்கள் பலர் காத்திருந்தனர். அவளுடைய விருப்பங்கள் உடனே நிறைவேற்றப்பட்டனவா இல்லையா என்று கவலைப்பட்டு அக்கறை செலுத்தவும், அவை உடனே நிறைவேற்றப் பட்டிருந்தால் நிறைவேற்றியவர்களைப் பாராட்டவும், நிறை வேற்றாமல் தாமதம் செய்யப்பட்டிருந்தால், அப்படித் தர்மதம் செய்தவர்களைக் கண்டிக்கவும்கூட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன அங்கே. ஆனாலும் எதற்காக ஏங்குகிறோம் என்று தெரியாத ஏதோ ஒன்றுக்காக அவள் ஏங்கி ஏங்கித்தான் வளர்ந்திருக்கிறாள். படிப்பதற்கு ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் புத்தகங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டிருந்தன. அந்த வீட்டுக்குள் வராத பத்திரிகைகளும் செய்தித் தாள்களும் இல்லை. தோட்டத்தின் ஒரு பகுதியில் அவளுடைய அறைக்குள்ளேயிருந்து அவளே படியிறங்கிப்போய் பறித்துக் கொள்வதற்கு வசதியாகச் சகலவிதமான மலர்ச்செடிகளும், கொடிகளும் பயிரிடப்பட்டிருந்தன. அப்பா அவளை அரச குமாரியாகத்தான் பேணி வளர்த்தார்.

அவளோ பிச்சைக்காரியைப்போல் எதற்கோ ஏங்கிக் கொண்டே வளர்ந்தாள். சிறு வயதில் தாயை இழந்து விட்ட எந்தப் பெண்ணும் எத்தனை வசதிகளுக்கு இடையேயும் இப்படித்தான் வளர முடியும். தன் அழகில் நிரம்பிக் கிடக்கும் அந்தரங்கங்களும் தன் அந்தரங்கத்தில் நிரம்பிக் கிடக்கும் அழகுகளும் பிறருக்குத் தெரியாமலே வளர்ந்து விட்ட காட்டுமான் கன்று போல் மல்லிகைப் பந்தலின் தனிமையில் செல்வக் குடும்பம் என்ற உயரத்திலிருந்து வெறும் மண்ணில் கீழ் இறங்கி நடக்காமலே வளர்ந்து விட்டாள் அவள். நேற்றுவரை தன் மனத்தைப் பாதிக்கும்படியான எந்த எண்ணத்தையும் அவள் எண்ணியதில்லை. இன்று அவளைப் பாதித்திருக்கும் இந்த எண்ணமோ மற்றொருவரிடம் சொல்லி ஆதரவு தேட முடியாத ஒன்று. மிக அந்தரங்கமான விருப்பங்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/81&oldid=595976" இலிருந்து மீள்விக்கப்பட்டது