பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 ⚫ போதி மாதவன்

தெடுத்த அரக்கர்கள் அவர்மீது அவைகளை வீசமுடியாமல் கைகள் முடங்கி நின்றனர். வானத்திலிருந்து அவர் மீது பொழியப்பட்ட அனற் கங்குகள் அரசமரத்தடியில் செந்தாமரை இதழ்களாகச் சிதறிக் கிடந்தன. போதி சத்துவர் அவைகளையெல்லாம் குழந்தைகளின் விளையாட்டாக எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தார். காகங்களின் நடுவே கருடன் அமைதியோடு அமர்ந்திருந்தல் போல, அவர் விளங்கினார்.

மாரனுடைய குமாரர்களான கலக்கம், செருக்கு, கேளிக்கை ஆகிய மூவரும், அவனுடைய குமாரிகளான காமம், களிப்பு வேட்கை ஆகிய மூவரும் போதிசத்துவரை அசைக்க முடியவில்லை. கௌதமர் மாரனைப் பார்த்து, ‘மேரு மலையைக் காற்று அசைக்க முடிந்தாலும், நீ என்னை அசைக்க முடியாது! நெருப்பு குளிரலாம்; நீரின் நெகிழ்ச்சி குன்றலாம்; பூமியே உருகி ஓடலாம். ஆனால் பல்லாண்டுகளாகப் பல பிறவிகளிலேயே தேடிய தவ வலிமையுள்ள நான் என் தீர்மானத்தைக் கைவிடப் போவதில்லை! இரு கட்டைகளை வைத்துக் கடைந்து கொண்டேயிருப்பவன் நெருப்பைக் காண்பான். பூமியை அகழ்ந்து கொண்டே செல்பவன் கடைசியில் தண்ணீரைக் காண்பான். அதேபோல் விடாமுயற்சியுள்ளவன் வெற்றி கொண்டே தீருவான்!’ என்று கூறினார். முடிவில் மாரன் தோல்வியுற்று ஓட ஆரம்பித்தான்.

ஓடும்போது, ‘ஏழு வருடம் படிப்படியாக இவ் வண்ணலைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தேன் பேரறிவும், பெருவிழிப்புமுள்ள இவரை அண்டுவதற்கே வழி கிடைக்கவில்லை. கல்லைக் கண்டு மாமிசத்துண்டு என்று கருதி, “இந்த இறைச்சி இனிப்புள்ளதாக இருக்கும்!” என்று சொல்லும் காகத்தைப் போல் இருக்கிறது என் நிலைமை. அங்கே இனிப்புமில்லை, இறைச்சியுமில்லை என்று தெரிந்ததும், காகம் பறந்து செல்கிறது. இவ்வாறு