பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அற ஆழி உருட்டுதல் ⚫ 191

‘வருக, என் சகோதர! தருமம் நன்கு உபதேசிக்கப் பெற்றிருக்கிறது. துக்கத்தை அறவே ஒழிப்பதற்காகப் புனித வாழ்வு வாழ்வாயாக!’ என்று கூறிப் பகவரும் அவரை ஏற்றுக் கொண்டார். பௌத்த தருமத்தில் சரணடைந்து முதல் பிக்குவாகச் சேர்ந்தவர் கௌண்டின்யரே. முதன் முதலாக ஒரே உபதேசத்திலேயே தருமத்தை உணர்ந்து கொண்டதால் அவருக்கு அஜ்ஞரத[1] கௌண்டின்யர் என்று புத்தரே பெயர் கொடுத்தார். அப் பெயரே பின்னாலும் நிலைத்து விட்டது.

மற்ற நான்கு சீடர்களும் பின்னால் புத்தரையும் தரு மத்தையும் சரணடைந்து பிக்குக்களாயினர். சீடர்கள் காசிமா நகரில் பிச்சையெடுத்து வரும் உணவை அருந்திக் கொண்டு புத்தரும் சிலநாள் அங்கேயே தங்கி அற உரைகள் பகர்ந்து கொண்டிருந்தார்.

ஆன்மாவின் இலக்கணம்

ஆன்மாவின் இலக்கணம் பற்றிப் போதிநாதர் ஐந்து சீடர்களுக்கும் செய்த உபதேசம் வருமாறு :

‘பிக்குக்களே! உடல் ஆன்மாவற்றது. பிக்குக்களே, உடலே ஆன்மாவாயிருந்தால், இந்த உடல் நோய்க்கு உட்படாது. உடல் சம்பந்தமாக, “என் உடல் இப்படியிருக்கட்டும், என் உடல் அப்படியிருக்கட்டும்” என்று சொல்லக் கூடியதாக இருக்கும். பிக்குக்களே, உடல் ஆன்மாவற்றதாக இருப்பதாலேயே உடல் நோய்க்கு உள்ளாகின்றது, “என் உடல் இப்படியிருக்கட்டும், என் உடல் அப்படியிருக்கட்டும்” என்று சொல்ல முடியவில்லை.


  1. அஜ்ஞாத-அறிந்தவர்.