பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262 ⚫ போதி மாதவன்

அவைகளைச் சரி பார்த்து ஏற்றுக்கொண்டபின், அவைகள் குறித்து வைக்கப்பெற்றன.

அரசகுலக் குமரர்கள்

சித்தார்த்தர் அவதரித்த காலத்திலேயே சாக்கியகுலத் தலைவர்கள் தங்கள் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் ஒரு வீரன் வீதம் அவருக்குத் தொண்டு செய்ய அனுப்புவதாகச் சபதம் செய்து கொண்டிருந்தனர். அவர் அரசராக இருந்து ஆட்சி செய்தால், அந்தச் சாக்கிய இளைஞர்கள் அரசசேவை புரிய வேண்டும் என்றும், அவர் துறவி யானால் அவர்களும் துறவிகளாகி அவரைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் தீர்மானித்திருந்தனர். ஏனெனின் சித்தார்த்தர் பிறந்ததிலிருந்தே அவர் அடைவது அரசா, துறவா என்பது நிச்சயமில்லாதிருந்தது. முன்னால் குடும்பத் தலைவர்கள் செய்திருந்த உறுதிப்படி, ஆயிரக்கணக்கான சாக்கிய வாலிபர்கள். பிக்குக்களாகி ஐயனைச் சரணடைந்தனர்; எண்பதினாயிரம் பேர்கள் என்று பழைய நூல்களில் கூறப்பட்டிருக்கின்றது!

மற்றைக் குடும்பத்தாரைப் போலவே சுத்தோதனருடைய மற்றொரு சகோதரரான துரோணோதனரின் மைந்தர்களான அனுருத்தனும் மகாநாமனும்[1] தமக்குள் யார் பிக்குவாக வேண்டும் என்பது பற்றி யோசித்தனர். முடிவில் அனுருத்தன் அதற்கு இசைந்து, அன்னையிடம் சென்று அனுமதியும் பெற்றான்.


  1. அனுருத்தன் அமிர்தோதனர் மைந்தன் என்றும் கூறுவர். மொத்தத்தில், அரச குமாரர்களின் வரலாறு பற்றி நூல்களிலே பெருங் குழப்பமே காணப்படுகின்றது.