பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

280 ⚫ போதி மாதவன்

மனைவியைக் கைவிட்டான்; இப்போது நிர்வாண இன்பத்தைக் கண்டு’ அப்சரசுகளையும் கைவிட்டு விட்டான்!

உடனே அவன் நேரே ததாகதரிடம் சென்று தன் மனமாற்றத்தைத் தெரிவித்தான். கட்டைகளைக் கடையும் போது புகையைக் கண்டுவிட்டால், விரைவிலே நெருப்பு வரும் என்பது நிச்சயமாவதுபோல, அவனுடைய மன மாற்றம் மேற்கொண்டு கிடைக்கப்போகும் பெரிய நன்மைக்கு அறிகுறி என்று ஐயன் மனமகிழ்ந்து கூறி அவனை வாழ்த்தினார்.

‘துக்கத்தை அறவே நீக்கும் அமுதம் உன்னிடத்திலேயே இருக்கின்றது!’ என்று ஆரம்பித்துப் பெருமான் நெடுநேரம் அவனுக்கு அறவழியின் படிகளை வரிசையாக விளக்கி வைத்தார். கட்டுப்பாடான ஒழுக்கமே முக்தி மார்க்க முதற்படி என்று அவர் கூறினார். முடிவில், ‘கருத்தோடு ஊக்கமாயிருத்தலே முதன்மையான அவசியம்; செய்ய வேண்டியவைகளைச் செய்து முடிப்பதற்கு அதுவே அடிப்படை. அமைதி அடைவதில் ஆர்வம் கொண்டால், ஆனந்த வாழ்வை அடைவது நிச்சயம்!’ என்றார்.

நந்தன் அருள்வடிவான அண்ணலின் உதவியால் ஞானமடைந்து, அருகத்தானான்.

பின்னால் ஒரு சமயம் அண்ணலை அடைந்து, அவன், ‘தங்களுக்கு நான் எப்படி நன்றி செலுத்த முடியும்?’ என்று வேண்டினான்.

‘நீ பெற்ற போதத்தைப் பிறர்க்குப் போதிப்பதே நன்றி! தானங்களிலே சிறந்தது தருமதானமே!’ என்றார் ததாகதர்.