பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜேத வனம் ⚫ 283

பெருமானுக்கு அர்ப்பணம் செய்வதாயும் கூறினார். மேலும் நிலத்திற்கு மட்டுமே தாம் விலை வாங்கிக் கொள்வதாயும், நிலத்தில் நிற்கும் மரங்களை விலை யில்லாமல் தாம் அளிப்பதாயும், நிலத்திலே பரப்பியுள்ள பொன்னில் பாதியை மட்டும் தம்மிடம் செலுத்தும் படியும் அவர் கேட்டுக்கொண்டார். அநாத பிண்டிகரும் சம்மதித்தார். அப்படிக் கொடுத்த பொருளே ஐம்பத்து நான்கு கோடிப் பொற்காசுகள் என்று பௌத்த உரை நூல்கள் கூறுகின்றன! நிலமும் மரங்களும் சாரீபுத்திரரின் பொறுப்பில் ஒப்படைக்கப் பெற்றன.

வானளாவி நின்ற விகாரையை வள்ளல் கட்டி முடித்தார். இளவரசர் ஜேதர் தாம் அளித்திருந்த முகப்பிலுள்ள நிலத்தில் முன்வாயிலும், பண்டகசாலைக்கு ஏற்ற மண்டபம் ஒன்றும் தம் செலவில் அமைத்துக் கொடுத்தார்.

சாரீபுத்திரர் விகாரை அமைப்பதில் கண்ணும் கருத்துமாயிருந்து வந்ததோடு, நகரிலும் சுற்றுப் புறத்திலும் இடைவிடாமல் தருமப் பிரசாரம் செய்து வந்தார். அந்தக் கருத்தோடு தான் ஐயனும் அவரை அனுப்பியிருந்தார். அங்கே புறச் சமயங்களைச் சேர்ந்தவர்கள் கண்டு பொறாமைப்படும்படி அவர் செல்வாக்குடன் வேலை செய்து வந்ததால், அவர்களிற் சிலர் அவரைக் கொலை செய்துவிடவும் முயன்றனர். அவர்கள் சூழ்ச்சிகளிலிருந்து சாரீபுத்திரர் தப்பித்துக் கொண்டு, அவர்களையும் தமது தருமத்திற்கு இழுத்துக் கொண்டார்.

எல்லா வேலைகளும் முடிந்ததும், அநாத பிண்டிகர் புத்தர் பெருமானுக்குத் தகவல் சொல்லியனுப்பினார். ஜேதவனத்தையும் விகாரையையும் வந்து ஏற்றுக் கொண்டருள வேண்டும் என்று அவர் வேண்டிக்