பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

286 ⚫ போதி மாதவன்

மனமார வாழ்த்திப் புகழ்ந்தார். ‘வனத்திலுள்ள மண மலர்களின் வாசனைகள் யாவும் காற்றிலே ஒன்று சேர்ந்து வீசுவதுபோல், தனி மனிதர்களின் பண்பாடுகள் பலதிறப்பட்ட நிலைகளில் இருப்பினும், இங்கே எல்லாம் ஒன்று சேர்ந்து சங்கமாகக் கூடி எப்பொழுதும் பரிமளித்துக் கொண்டிருக்கும்!’ என்றும், ‘உலகத்துச் செல்வம் ஒரு நிலையில் நில்லாது அழிவுறுவதாலும், முடிசூடிய மன்னனும் கவலைகளால் நலிந்து போவதாலும், புனித வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள சாதாரண மனிதனே உயர்ந்தவன்!’ என்றும் அவர் சங்கத்தைப் பற்றியும் பலமுறை யில் புகழ்ந்துரைத்தார்.

அவருடைய உள்ளம் ஓரளவு பக்குவம் அடைந்திருப்பதை உணர்ந்த அண்ணல், அவருடைய குறைகளையும் அறிந்து அவருக்குச் சில நல்லுரைகள் பகரவேண்டும் என்று திருவுளம் கொண்டார். பணத்திலும் புலன் இன்பங்களிலும் அரசர்களுக்கு அதிக ஆசை இருந்து வந்தது. எனவே அதற்கு நன்மருந்தாக விளங்கும் வண்ணம் ஐயன் அவரைப் பார்த்துப் பேசலானார்.

‘அரசே! ஏதோ முந்திய தீவினையால் தாழ்ந்த நிலையிலே பிறந்தவர்கள்கூட, ஒழுக்கம் நிறைந்த ஒரு பெரியாரைக் கண்டால், அவரிடம் மரியாதை காட்டுகின்றனர். முற்பிறவிகளில் செய்த புண்ணியவசத்தால் இப் பிறவியில் மன்னர் பதவியைப் பெற்றுள்ளவர் புத்தரையே நேரில் காணும்போது எவ்வளவு அதிக மரியாதை கொள்வர் என்பதை எளிதிலே கண்டு கொள்ளலாம்.

‘இப்போது நான் சுருக்கமாகக் கூறும் தரும விளக்கத்தை அரசர் கவனமாய்க் கேட்டு, என் சொற்களிலே கருத்தூன்றி, அவைகளை உள்ளத்திலே உறுதியாய்க் கொள்வாராக!