பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

318 ⚫ போதி மாதவன்

களிலும் நடந்து சென்று கொண்டிருந்தாள். தாமரை மலர் போன்ற அவள் பாதங்கள் வாடி வதங்கி வீங்கி விட்டன. அவைகளில் ஏற்பட்ட வெடிப்புக்களிலிருந்து உதிரம் கசிந்து கொண்டிருந்தது. அவளைப் போலவே மற்றைப் பெண்களும், எல்லையற்ற இடர்களை அனுபவித்துக் கொண்டிருந்தும், உறுதி குலையாமல் அவளுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் வைசாலியில் மகாவனத்தை அடைந்ததும்’ நேராக விகாரைக்குள் செல்லாமல், வெளியே முன் வாயிலில் அமர்ந்து கொண்டு காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஆனந்தர் அவர்களைக் கண்டார். நெடுவழி நடந்த களைப்பால் சோர்ந்தும், கால்கள் வீங்கியும், சாலைகளின் புழுதி படிந்த உடைகளுடனும், மாசுற்ற மணிகளைப் போல், விளங்கிய அந்த ஸ்திரீகளைக் கண் டதும், அவர் திடுக்கிட்டுக் கௌதமியை நோக்கி, ‘அம்மா, சாக்கியர் நாட்டில் எவரேனும் படையெடுத்து வந்துள்ளனரா? நீங்கள் ஏன் இப்படி அலங்கோலமாக வந்து விட்டீர்கள்?’ என்று வினவினார். கௌதமி தாங்கள் வந்த காரியத்தை தெரிவித்தாள் : ‘ததாகதர் பெண்களைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்காததால், நாங்கள் வெளியே நிற்கிறோம்!’ என்றாள். அவளுடைய நீர் நிறைந்த கண்களையும் அழுகுரலையும், துயரத்தையும் கண்டு, ஆனந்தர் ஐயனை நாடி விகாரையுள் சென்றார்.

உள்ளே சென்றவர் பகவரை வணங்கி, அவர் அருகே ஒரு பக்கத்தில் அமர்ந்து கொண்டு, அன்னை கௌதமி முன் வாயிலில் வந்து காத்திருப்பதைத் தெரிவித்தார். ‘பெரும! ஸ்திரீகளும் தரும ஒழுக்கத்தை மேற்கொண்டு சங்கத்திலே சேர அனுமதித்தல் நலம்!’ என்றும் கூறினார்.

‘போதும், ஆனந்தா! ஸ்திரீகளை அவ்வாறு அனுமதிக்க வேண்டும் என்று விரும்ப வேண்டாம்!’ என்று