பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருபது வருட யாத்திரைகள் ⚫ 319

பெருமான் மறுத்து விட்டார். மீண்டும் இருமுறை ஆனந்தர் கேட்டதற்கும், அதே மறுமொழிதான் கிடைத்தது. ஆயினும் ஆனந்தர் விடுவதாயில்லை.

பெண்கள் துறவு பூண முடியுமா, முடியாதா என்றும், அவர்கள் தருமத்தை ஏற்றுக் கொண்டு உபாசிகைகளாகி, மூன்று படிகளைத் தாண்டி, நான்காவதான அருகத்து நிலையை அடைய முடியுமா, முடியாதா என்றும், அவர் பெருமானிடம் சில கேள்விகள் கேட்டார். பெருமான் அவர்கள் அவ்வாறெல்லாம் அடைய முடியும் என்று கூறினார். பிறகு ஆனந்தர் அன்னை கௌதமியின் ஏற்றத்தையும், அவள் பெருமானைப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்து வந்த பெருமையையும் எடுத்துக் கூறி, அவளைத் ததாகதரின் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளல் நலம் என்று மீண்டும் வேண்டினார்.

முடிவில் ததாகதரும் மனமிரங்கிப் பிக்குணிகளுக்குரிய எட்டு முக்கியமான விதிகளைக் கௌதமி ஏற்று நடக்க இசைந்தால், அவளைச் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று அனுமதித்தார், அந்த எட்டு முக்கிய விதிகளாவன :

ஒரு பிக்குணி நூறு வயதானவளாயிருந்தாலும், ஒரு பிக்கு எவ்வளவு இளைஞனாயிருந்தாலும், அவனைக் கண்டதும் அவள் எழுந்து வணங்க வேண்டும்.

ஒரு பிக்குக்கூட இல்லாத பிராந்தியத்தில் (ஜில்லாவில்) பிக்குணி மாரிக்காலத்தில் தங்கி யிருக்கக் கூடாது.

ஒவ்வொரு பட்சத்திலும் (மாதம் இரு முறை) பிக்குணி பிக்குக்களிடம் தரும உபதேசம் பெற வேண்டும்.