பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346 ⚫ போதி மாதவன்

வைசாலியிலுள்ள லிச்சவிகளின் பகை ஏற்பட்டுள்ளதா? வேறு பகைவர் எவரேனும் வந்துள்ளாரா? என்றெல்லாம் அவர் கேட்டார்.

மன்னர் அத்தகைய துயரம் எதுவும் நேரவில்லை என்றார். பிறகு அவர் அங்குலிமாலனைப் பற்றிப் பேசலானார். அவன் செய்துள்ள அட்டூழியங்களைக் கண்டு மக்கள் அல்லலுற்றுத் தம்மிடம் பன்முறை வந்து வேண்டிக் கொண்டும், தம்மால் அவனை ஒன்றும் செய்ய முடியாதிருந்தது என்றும், அப்போது ஐந்நூறு குதிரை வீரர்களுடன் வனத்துள் சென்று அவனைப் பிடித்து வருவதற்காகவே தாம் புறப்பட்டு வந்திருப்பதாயும், அது சம்பந்தமாக ஐயன் ஆலோசனை கூற வேண்டும் என்றும் மன்னர் கூறினார்.

புத்தர் : அந்த அங்குலிமாலன், தலையையும் தாடியையும் சிரைத்துவிட்டு, மஞ்சள் உடையணிந்து, கொல்லாமை, திருடாமை, பொய்யாமை முதலிய விரதங்களை மேற்கொண்டு, ஒருநாளைக்கு ஒரே பொழுது மட்டும் உணவருந்தி, உயரிய ஒழுக்கங்களையெல்லாம் கடைப்பிடித்து வாழ்ந்து வந்தால், தாங்கள் அவனைப் பார்த்ததும் என்ன செய்ய விரும்புவீர்கள்?

பிரசேனஜித்து : அவனை வணங்குவேன்!

புத்தர்: (அருகே அமர்ந்திருந்த பிக்குவைக் காட்டி) இதோ, இவன் தான் அங்குலிமாலன்!

மன்னர் நடுக்க மடைந்தார். ‘இங்கே பயப்பட வேண்டியது எதுவுமில்லை; அஞ்சவேண்டாம்!’ என்று புத்தர் அவருக்குத் தேறுதல் மொழி கூறினார்.