பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348 ⚫ போதி மாதவன்

இந்த அங்குலிமாலன் யார், அவன் ஏன் கொலை பாதகனாக விளங்கினான் என்ற விவரங்களைப் பௌத்தக் கதைகள் கூறுகின்றன. அவன் பிறப்பில் பிராமணனாம். கோசல மன்னரின் புரோகிதராயிருந்த பார்க்கவர் அவன் தந்தை. அவன் அக்காலத்தில் புகழ் பெற்று விளங்கிய தட்சசீலத்துச் கலாசாலைக்குச் சென்று கல்வி பயின்று வந்தான் அங்கே அவனுடன் புயின்ற மாணவர் சிலர் அவனிடம் பொறாமை கொண்டு ஆசிரியரிடம் அவனைப் பற்றி அவதூறுகள் சொல்லி, அவர் மனத்தை விஷமாக்கி விட்டனர். அவர் அங்குலி மாலனைத் தொலைத்துவிட வேண்டும் என்று கருதி, அவனுக்கு மேற்கொண்டு தாம் கல்வி புகட்டவேண்டும் என்றால், அவன் ஆயிரம் பேர்களைக் கொலை செய்ய வேண்டும் என்றும் அப்படிக் கொன்றதற்கு அடையாளமாக ஆயிரம் விரல்களைத் தம்மிடம் கொண்டுவந்து காட்ட வேண்டும் என்றும் சொல்லி, அவனை அனுப்பி விட்டார். அவனும், அவர் கூற்றை மெய்யென்று நம்பி, வெளியே சென்று, கொலைத் தொழிலை மேற்கொண்டானாம். ஆயிரம் கொலைகளுக்கு ஒன்று குறைய அவன் முடித்து விட்டான். கடைசியாக வந்த துறவியை அவன் பிடிக்கவே முடியவில்லை, அவரே அவனை ஆட்கொண்டு விட்டார்!