பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவதத்தனும் அஜாசத்துருவும் ⚫ 367

அவர்களை வரவேற்றான். சிறிது நேரத்திற்குப் பின், அவன் களைப்படைந்திருக்கையில் சாரீபுத்திரர் பிக்குக்களுக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார் சிறிது நேரத்தில் பிக்குக்கள் அனைவரும் அவர் மொழிகளில் ஈடுபட்டுப் புத்தர் பெருமானிடம் பக்தி கொண்டனர். இடையில் தேவதத்தன் களைப்பினால் உறங்கிவிட்டான். அவன் விழித்துப் பார்க்கையில், அங்கு அவனைத் தவிர வேறு ஆளேயில்லை; எல்லோரும் ஜேதவன விகாரைக்குச் சென்று விட்டனர்!

தேவதத்தன் வீதிகளிலே சென்று ஐயமெடுக்கவும் வழியில்லை; ஜனங்கள் உணவளிக்க மறுத்ததோடு, அவனுடைய திருவோட்டையும் உடைத்தெறிந்து விட்டனர். அவன் உள்ளமுடைந்து, ஒன்பது மாதம் நோயுற்றுக் கிடந்தான். அக்காலத்தில் அவன் புத்த தேவருக்குத் தான் இழைத்து வந்த கொடுமைகளை யெல்லாம் எண்ணி வருந்தினான். பெருமான் எவரிடத்தும் பகைமை கொள்ளாதவர் என்பதால், தன்னிடத்தும் அவர் கருணை காட்டுவார் என்று அவன் கருதினான். அந்த எண்ணத்தோடு அவன் ஐயனைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினான் அப்போது சிலர் அவனை ஒரு டோலியில் வைத்துத் தூக்கிக்கொண்டு போய் ஜேதவனத்தில் இறக்கினர். அவர்கள் கை, கால்களைக் கழுவிக் கொள்ளச் சென்றிருந்த சமயத்தில், தேவதத்தன் அவசரமாக எழுந்து டோலியிலிருந்து தரையில் காலை வைத்தான். ஐயனை உடனே தரிசிக்க வேண்டும் என்று அவன் உள்ளம் துடித்தது. ஆனால் அவன் கால் வைத்த இடத்தில் பூமி பிளந்து, நெருப்புப் பிழம்பாக எரிய ஆரம்பித்தது அவனும் அக்கினிப் பிழம்பில் கலந்து வெடிப்பின் வழியே பாதலம் சென்று விட்டான்.