பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடைசி யாத்திரை ⚫ 369

அவர் செய்த யாத்திரை பற்றியும், மல்லர்கள் வாழ்ந்த குசீநகரில் அவர் முடிவெய்தியது பற்றியும் ‘மகா-பரி - நிர்வாண சூத்திர’த்தில்[1] விவரங்கள் காணப் பெறுகின்றன. தமது இறுதி யாத்திரையில் அவர் பல ஊர்களில் அடியார்களுக்கும் மக்களுக்கும் செய்த உபதேசங்களின் சுருக்கங்களும் அதில் குறிக்கப் பெற்றுள்ளன. அந்தச் சூத்திரத்தை ஆதாரமாகக் கொண்டு புத்தர் பெருமானின் கடைசி யாத்திரையையும், மகா-பரி-நிருவாணத்தையும் நாம் விவரிப்பதற்கு முன்னால், பெருமானின் சிற்றன்னை யாகிய கௌதமி அம்மையாரும், வாழ்க்கைத் துணையாக விளங்கிய யசோதரா தேவியாரும் நிர்வாண மடைந்ததைக் குறிப்பிடவேண்டும்.

அன்னையார்

கௌதமியார் வைசாலி நகரில் நெடுங்காலம் பிக்குணிகளின் தலைவியராயிருந்து புத்தருக்கும் தருமத்திற்கும், சங்கத்திற்கும் அரும்பெரும் பணிகள் ஆற்றிவந்தார். நாள்தோறும் பௌத்த தருமம் வளர்ந்து பிக்குக்களும், பிக்குணிகளும் பல்லாயிரக்கணக்கில் பெருகி வந்ததைப் பற்றி எண்ணி எண்ணி அவர் உள்ளம் பூரித்திருந்தார். தாம் வளர்த்து வந்த தவப்புதல்வர் கோடிக் கணக்கான மக்களின் பிறவிப் பிணிக்கு மருத்துவராக விளங்கியதுடன், தமக்கும் நற்கதியளிக்கும் வழியை உணர்த்தியதற்காக அப்புனிதரை அவர் உள்ளன்போடு வாழ்த்தி வணங்கி வந்தார். ஒரு சமயம் புத்தர் பிரான் வைசாலி நகரில் மகாவனத்தில் அமைந்திருந்த கூடாகார விகாரையில் தங்கி-


  1. மகா-பரி-நிருவாண சூத்திரம் தீக நிகாயத்தி லுள்ளது; இதைப்பற்றி 1838–ல் ஆராய்ந்து எழுதிய டர்னர் என்பார், பௌத்த பிடகங்கள் மூன்றிலும் இதுவே முதன்மையாகக் கவனிக்கத்தக்க கவர்ச்சியுள்ளதாயிருக்கும் என்று குறித்துள்ளார். இதில் பொருள் செறிந்திருப்பதுடன், வரலாற்றுக் குறிப்புக்களும் நிறைந்திருக்கின்றன.