பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 ⚫ போதி மாதவன்

கவனித்து வந்த சுத்தோதனர், மந்திரிகளைக் கூட்டி வைத்து அவர்களுடன் கலந்து ஆலோசனை செய்தார். மழிலுடைய தக்க நங்கை ஒருத்தியை அவனுக்குத் திருமணம் செய்து, அழகிகள் பலரைப் பணிப்பெண்களாக நியமித்து விட்டால், அவன் மனம் கேளிக்கைகளிலே பாடுபட்டு, உலக வாழ்வில் பற்றுக் கொள்ளும் என்று அவர்கள் கருதினார்கள். சிதறிச் செல்லும் சிந்தனைகளை மைக்குழல் மாதரசி ஒருத்தி ஒருநிலைப்படுத்தித் தன் வசப்படுத்திக் கொள்வாள் என்றும், இரும்புச் சங்கிலிகளாலும் கட்டிப் பிணிக்க முடியாத உள்ளத்தை அவளுடைய மென்மையான கூந்தல் கட்டிவிடும் என்றும் அவர்கள் அபிப்பிராயம் கூறினர். அரசர்க்கும் அது சரியான யோசனையாகத் தோன்றியது. தமது வமிசம் ஆற்றொழுக்குப் போல் உலகில் நீடித்து நிலைத்திருக்க வேண்டுமென்றும், சித்தார்த்தனோடு முடிவடைந்து விடக்கூடாதென்றும் பல்லாண்டுகளாகக் கருதி வந்த நிலையில், அவர் விரைவிலே மைந்தனுக்குத் திருமணம் செய்து வைப்பதே நலமென்று இசைந்தார்.

ஆனால், சித்தார்த்தனுக்கு ஏற்ற பெண்ணை எப்படித் தேடிக் காண்பது? மன்னர் தேர்ந்தெடுத்த பெண்ணை, அவன் ஏற்பான் என்பது என்ன உறுதி? வனப்பு மிகுந்த பல பெண்களை அவன் முன்பு கொணர்ந்து காட்டினால், எல்லோரையும் பார்த்து விட்டு, ‘இது தானா பெண்ணுலகம்! எனக்குத் திருமணமே வேண்டாம்!’ என்று அவன் கூறிவிட்டால், என் செய்வது? இவ்வாறு பல வினாக்களையும் எழுப்பி, மன்னர் மந்திரி களோடு கலந்து ஒரு முடிவுக்கு வந்தார். நகரிலுள்ள பேரழகிகளை அரண்மனையிலே ஒருநாள் கூட்டி வைத்து, அவர்களிடையே அழகுப்போட்டி முதலிய போட்டிகள் படத்தி, வெற்றி பெற்ற பெண்களுக்குச் சித்தார்த்தன் கையாலேயே பரிசுகள் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதே அந்த முடிவு. சித்தார்த்தனுடைய