பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 ⚫ போதி மாதவன்

இன்பங்களும் சித்தார்த்தனின் சித்தத்தைச் சிறைப்படுத்தி பவைத்துக் கொண்டிருந்தன. அரசர் சுத்தோதனர் அதனால் மனச் சாந்தி பெற்றுத் தாம் மட்டும் உள்ளத் துறவு பூண்டு, ஒழுக்கம் பேணி, உயரிய முறையில் அரசு புரிந்து வந்தார். சித்தார்த்தன் தங்கியிருந்த அரண்மனைக்கு வெளியே வெகு தூரத்திற்கு அப்பால் ஒரு பெரிய கோட்டை கட்டி, அதன் நடுவே உள்வாயில், நடுவாயில், வெளிவாயில் என்று மூன்று வாயில்களை அமைத்து, அவ்வாயில்களில் காவலுக்காகத் திறமைமிக்க வீரர்களை அவர் நியமித்திருந்தார். யாரும் அவ்வாயில்களைக் கடந்து செல்ல முடியாது. இளவரசனைக் கூட அவ் வாயில்களில் அனுமதிக்கக்கூடாது என்று அங்கிருந்த காவலர்களுக்குக் கண்டிப்பாக ஆணையிடப் பெற்றது. எனவே வெளியுலகிலுள்ள துயரம், சோகம் எதையும் காண முடியாத நிலையில், வாழ்வே முடிவில்லாத ஒரு காதற் கீதம் என்று இளவரசன் கருதிக் கொண்டிருக்கும் படியே, சூழ்நிலை யாவும் பொருந்தியிருந்தன.

இவ்வண்ணமாக நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாகிக் கழிந்து கொண்டிருந்தன. சித்தார்த்தன் முன்னம் பல பிறவிகளிலே மனிதனாயும், விலங்காயும், அருகத்தாயும், போதி சத்துவராயும் தான் நோற்ற நோன்புகளையும், இயற்றிய தவங்களையும், ஆற்றிய அறங்களையும் மறந்திருந்தவன் போல், காதல் வலையின் மென்மையான கண்ணிகளிடையே பத்து ஆண்டுக் காலம் கட்டுண்டிருந்தான்.