பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 ⚫ போதி மாதவன்

காரனாகக் காட்சியளித்தான். அவனுடைய உலர்ந்த உடலும், வற்றிய தோலும், குழிவிழுந்த கண்களும் பார்க்கப் பயங்கரமாயிருந்தன. ‘ஐயா, பிச்சை!’ என்று அவன் கூவும்போதே இருமல் அவனைப் பற்றிக் கொண்டது அவன் கையிலிருந்த கழியின் மேல் உடலைச் சாய்த்துக்கொண்டு, மெல்ல - மெல்லத் தள்ளாடிக் கொண்டே முன்னால் நகர்ந்து வந்தான். சுற்றியிருந்த ஜனங்கள், ‘இளவரசர் வருகிறார்!’ என்று கூறி அவனைக் கண் மறைவாக ஒதுங்கும்படி அழைத்துச் சென்றனர். அதற்குள் சித்தார்த்தர் அந்தக் கிழவனை நன்றாகக் கண்டுகொண்டார். உடனே, அவனை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று பணித்தார்.

அவர் சந்தகனைப் பார்த்து, ‘இவன் எத்தகைய மனிதன்? தலை நரைத்து, கண்கள் பள்ளத்தில் ஆழ்ந்து, உடல் ஒட்டிப் போயுள்ள இவன் யார்? இவனுடைய உடல் வெப்பத்தால் உலர்ந்து போய்விட்டதா? அல்லது பிறவியிலேயே இவன் இவ்வாறு தோன்றியவனா?’ என்று வினவினார். சாரதி திடுக்கிட்டுப் போய், உள்ளதை உள்ளபடி கூற அஞ்சினான். ஆனால், கிழவன் உருக் கொண்டு எதிரே நின்ற தேவனின் தெய்விக ஆற்றலால் அவன் உண்மையையே கூற நேர்ந்தது.

இவன் வயதான கிழவன். நெடுநாள் வாழ்ந்ததில்; உடலின் ஆற்றல் வற்றிவிட்டது; நரம்புகள் தளர்ந்து விட்டன. எண்பது ஆண்டுகளுக்கு முன் இவனும் பச் சிளங் குழந்தையாயிருந்து தன் அன்னையின் அமுதப் பால் பருகி வளந்தவன் தான்! பின்னால் அழகுள்ள வாலிபனாயிருந்து இவன் ஐம்புல இன்பங்களில் ஆழ்ந்திருந்தான். இவனும் நம்மைப் போல் நிமிர்ந்து நடமாடியவன் தான்; வயது ஏற ஏற உடல் தளர்ந்துவிட்டது; முதுமை வந்து விட்டது; இவனுடைய விளக்கில் எண்ணெய் வற்றி விட்டது. இப்போது திரி மட்டும் சிறிது எரிந்து கொண்டிருக்கிறது. அதுவும் விரைவில் அணைந்து போய்விடும்...