பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74 ⚫ போதி மாதவன்

விட்டுப் புதிய தளிர்களால் புத்தாடை புனைந்து பொலிவுடன் விளங்கிக் கொண்டிருந்தன. தாமரை, தாழை, சண்பகம், மாதவி முதலிய மலர்களின் மகரந்தத்துடன் மலைக் காற்று தவழ்ந்து வீசிக் கொண்டிருந்தது. எனவே ஒரு நாள் சித்தார்த்தர். மீண்டும் வெளியே சென்று அருகே யிருந்த வனங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசை கொண்டார். வண்டுகள் இசை பாடவும், கிளிகள் கொஞ்சவும், குயில்கள் அமுத கீதம் இசைக்கவும், வசந்தம் கொலுவீற்றிருப்பதைக் கண்டு வந்தால் தமது உள்ளத் திற்கு அமைதி ஏற்படும் என்று கருதி, அவர் அருமைத் தந்தையிடம் அனுமதி வேண்டினார்.

அரசரும் மகிழ்ச்சியடைந்து இளவயதுள்ள செல்வர் பலரையும், பரிவாரங்களையும் அவருக்குத் துணையாக அனுப்பி வைத்தார். இளவரசர்க்கு உரிய எழிலுடைய கண்டகம் என்னும் குதிரையைச் சந்தகன் கொணர்ந்து நிறுத்தினான். அதன் மீது தங்கத்தினால் செய்த சேணம் அமைக்கப்பெற்றிருந்தது; கடிவாளமும் தங்கம்; அதன் செவிகளின் அருகே தங்கப் பிடிகளில் அமைந்திருந்த கவரிகள் கட்டப் பெற்றிருந்தன. குதிரைமீது சித்தார்த்தர் ஏறிச் சென்றது இந்திரன் பவனி வருதல் போலிருந்தது.

போகின்ற வழியிலே சாலையின் இருமருங்கிலும் உழவர்கள் கழனிகளில் உழுது கொண்டிருந்தார்கள். நகருக்கு வெளியே காடும் கழனிகளும் அழகாய்த்தான் இருந்தன. ஆனால், கழனிகளைப் பண்படுத்த ‘மக்களும் எருதுகளும் படும்பாடுதான் பெருந் துயரமாகத் தோன்றியது. நீரில் நீந்திச் செல்வது போலவே ஏர்கள் நிலத்தைப் பிளந்து நீந்திக் கொண்டிருந்தன. புற்களும் செடிகளும் முளைத்திருந்த மண் கட்டிகள் உழவுசாலின் இரு பக்கங்களிலும் சிதறி விழுந்திருந்தன. பூமிக்குள் இருந்த பல புழுக்களும் பூச்சிகளும் உழவு சால்களின் பக்கங்களில் வதையுண்டு கிடந்தன. நல்ல வெய்யிலிலே நின்று மெய்