பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர் நீங்கு படலம் ⚫ 75

வருந்தி வேலை செய்த உழவர்களின் உடல்களில் சேறும் நீரும் தெறித்திருந்தன. உழைப்பினால் அவர்கள் உலைந்திருந்தார்கள். கதிரவன் உதிக்கு முன்பே கலப்பையில் பூட்டிய மாடுகள் களைத்துப் போயிருந்தன. மக்கள், மாடுகள் ஆகிய எல்லா உயிர்களிடத்திலும் அண்ணலின் செழுங்கருணை ஓடிப் பெருகிக் கொண்டிருந்தது.

வனத்தை அடைந்ததும், இளவரசர் குதிரையி லிருந்து இறங்கி நடந்து சென்றார். அங்கே ஓரிடத்தில் தம் தோழர் அனைவரையும் இருத்திவிட்டுச் சிறிது தூரத்திற்கு அப்பால் சென்று, இலைகள் அடர்ந்த ஒரு நாவல் மரத்தை அடைந்தார். ‘இனிது இனிது, ஏகாந்தம் இனிது’ என்பதை அவர் அந்த இடத்திலே முதல்முறை யாக உணர்ந்தார். இயற்கையில் அமைந்திருத்த சாந்தி அவர் உள்ளத்திலும் நிறைந்திருந்தது.

அங்கே பச்சைப் பட்டு விரித்தது போலப் படர்ந்திருந்த பசும்புல்லின் மீது அமர்ந்து கொண்டு, பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் மாற்றத்தையும் பற்றி அவர் சிந்திக்கலானார். சிந்தனையில் திளைக்கத் திளைக்க, அவர் உள்ளம் தெளிவும் உறுதியும் பெற ஆரம்பித்தது. உலகப் பற்றுக்கள் நீங்கி, உள்ளம் தூய்மை பெற்று, ஆழ்ந்த தியானமாகிய சமாதி நிலையை அடைந்தது. அந்நிலையில் உலகின் துயரமும் துன்பங்களும், மூப்பு, பிணி, மரணங்களால் விளையும் அழிவும் அவருக்குத் தெளிவாக விளங்கின. ‘அன்ன விசாரம், அதுவே விசார'மாக அலைகின்ற மக்கள், பிணி, மூப்பு, சாக்காடுகளிலிருந்து தாங்கள் தப்பித்துக் கொள்ள முடியாத நிலையில், தங்களுக்குள் வயோதிக மடைவாரையும், பிணியாளரையும், மரண மடைவாரையும் வெறுத்து அலட்சியம் செய்யும் அறியாமையைப் பற்றி அவர் வருத்தமடைந்தார். ‘இங்கேயுள்ள நான் என்னைப் போன்ற ஒரே தன்மையுள்ள மற்றொரு