பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர் நீங்கு படலம் ⚫ 323

நிகழ்ச்சிகளையே குறிப்பிடுவனவாகவும் இருக்கலாம். ஆனால், எது எப்படியாயினும், என் யசோதரையிட நான் கொண்டுள்ள அன்பு என்றும் மாறாது!’ என்று பல இனிய மொழிகள் கூறி, அவளை அச்சமின்றி மறுபடி துயில் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டார். அவ்வாறே அவள் மைந்தனை ஒரு கையில் அணைத்தவண்ணம் அப்படியே கண்ணயர்ந்து விட்டாள்.

ஜவந்தி மலர்களும், முல்லையும், பிச்சியும், ரோஜா இதழ்களும் பரப்பியுள்ள மலர் அமளி மீது பள்ளி கொண்டிருந்த தாயையும் சேயையும் நின்று பார்த்தார் சித்தார்த்தர். தம் அருமைக் குழந்தையைக் கையிலெடுத்துக் கடைசி முறையாகப் பார்க்க வேண்டும் என்று அவருக்கு ஓர் எண்ணம் தோன்றியது. ‘இராணியின் கையைத் தூக்கி வைத்து விட்டு என் மைந்தனை எடுத்தால், அவள் விழித்துக் கொண்டு விடுவாள்; நான் வெளியேறுவதற்கு அது இடையூறாகும். நான் புத்தனான பிறகு மீண்டும் வந்து என் செல்வனைப் பார்த்துக் கொள்கிறேன்!’ என்று அவர் தமக்குள்ளேயே சொல்லிக் கொண்டு முதலில் எழுந்த எண்ணத்தைக் கைவிட்டார். யசோதரை நித்திரை செய்து கொண்டே, தான் முன்புகண்ட கனவின் நினைவில், காலம் வந்துவிட்டது! காலம் வந்துவிட்டது!’ என்று புலம்பினாள்

“காலம் வந்து விட்டது!’ என்ற சொற்கள் சித்தார்த்தரின் மௌனத்தைக் கலைத்து விட்டது. தாம் நாட்டையும் நகரையும் துறந்து, உற்றார் உறவினரையெல்லாம் பிரிந்து, வெளியேற வேண்டிய காலம் வந்து விட்டது என்பதை அவர் உணர்ந்து கொண்டார். மாநில ஆட்சியை அவர் மதிக்கவில்லை. உயர்ந்த ஆடை, ஆபரணங்களை அவர் அலட்சியம் செய்தார். பட்டாடைகளுக்கும் பொன்னாடைகளுக்கும் பதிலாகத் தாழ்த்தப் பெற்ற சண்டாளரின் உடைக்கு மேலானது தமக்குத்