பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 ⚫ போதி மாதவன்

தேவையில்லை என்று தீர்மானித்தார். அரண்மனையின் அறுசுவை உணவுக்குப் பதிலாகப் பிச்சைச் சோறே இனித் தமது உணவு என்று உறுதி செய்து கொண்டார்.

உலகத்து உயிர்களின் புலம்பலெல்லாம் அவர் திருச் செவிகளில் ஒரே ஒலியாக ஒலித்துக் கொண்டிருந்தன. அதனால் அவருடைய ஆருயிர் துன்புற்று உருகியது. உயிர்களின் துக்கத்தை நீக்கும் வழி யாது? அதை அறிய வேண்டும். அது எதுவாயினும், வழி ஒன்று உண்டென்று அவர் நெஞ்சில் உறுதியாகத் தெரிந்தது. ஆறறிவு பெற்ற மனிதரைக் காப்பாற்றும் வழியைக் கண்டு கொண்டால், அதுவே ஏனைய உயிர்த் தொகுதிகளையும் காக்க உதவும் என்ற துணிவு ஏற்பட்டது அவருடைய அருமைத் தந்தையர் கூறியபடி வயோதிகம் வந்த பிறகு துற வறத்தை மேற்கொள்வதில் பொருளில்லை என்று அவருக்குத் தோன்றிற்று. கைக்கு எட்டிய ஆட்சியையே கைவிட வேண்டும்; இன்பங்களை நுகர்வதற் கேற்ற இளமையும், எழிலும், ஆண்மையும் நிறைந்துள்ள போதே போகங்களை ஒதுக்கிவிட்டுத் துறவு கொள்ள வேண்டும்; சுய நலத்திற்காக அல்லாமல் மண்ணகத்து மக்களுக் காகவே சகல பாக்கியங்களையும் இழக்க வேண்டும்: இவ்வாறு முற்றும் துறந்து முனைந்து தேடினால், மெய்ப் பொருளை எப்படியும் கண்டு விடலாம் என்று அவர் வைராக்கியம் கொண்டார். ‘இனி மண்ணே எனக்கு. மலரணை, காடுகளே எனக்கு வீடுகள்!’ என்று அவர் சொல்லிக் கொண்டார்.

பங்கயச் செல்விபோல் படுத்துறங்கும் கற்புக்கரசியை மீண்டும் நோக்கி, ‘இன்பக் கனியமுதே! அளப்பரிய அன்பினால் உன்னையும் துறக்கத் துணிந்து விட்டேன்! என் முயற்சியால் உலகம் உய்ய நேர்ந்தால், அதனோடு (சேர்ந்த உனக்கும் உய்வுண்டாகும்!’ என்று கூறி, அவள் அரவணைப்பிலிருந்த குழந்தையையும் கண்குளிரக் கண்டு