பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 ⚫ போதி மாதவன்

ளும்படி செய்தனர். துயிலையே கண்டறியாத காவலர்கள் அனைவரும் அந்நேரத்தில் அயர்ந்து துயில் கொண்டிருந்தனர். கதவுகள் திறந்திருப்பதைக் கண்ட இளவரசர், வேகமாக மாடியிலிருந்து கீழேயிறங்கி, சாரதி சந்தகனை மெதுவாகக் கூவி அழைத்தார். எந்த நேரத்திலும் அவருக்குப் பணி செய்வதற்காக அங்கேயே காத்திருந்த சந்தகன் உடனே எழுந்து ஓடிவந்தான். சித்தார்த்தர் அன்பும் உறுதியும் கலந்த குரலில் அவனிடம் தம் செய்தியைக் கூறினார்.

‘சந்தகா! பேரின்பத்தை நாடி நான் வெளியேறிச் செல்லத் தீர்மானித்துள்ளேன். என் கண்டகக் குதிரையை விரைவிலே கொண்டு வா! என் உள்ளத்தில் உறுதி பிறந்து விட்டது. சபதமும் செய்துவிட்டேன்.

‘இதுவரை தெய்வ மங்கையர் போல விளங்கிய என் தோழியர் பலரையும் இன்று தான் நன்றாகக் கண்டு கொண்டேன். அருவருக்கத் தகுந்த சடலங்களாக அனைவரும் தரைமீதுள்ள இரத்தினக் கம்பளங்களிலே உருண்டு கொண்டிருக்கின்றனர்!

எவ்வளவோ காவலுடன் பூட்டிப் பாதுகாக்கப் பெற்ற அரண்மனை வாயிற் கதவுகள் தாமாகத் திறந்து கிடப்பதைப் பார்! இந்த நாள் என் வாழ்க்கையின் சிகரமான நாள்! என் சங்கற்பம் நிறைவேறும் என்ற நன்னி மித்தங்களே எங்கும் காணப்படுகின்றன. ஆதலால் விரைவிலே பரியைக் கொணர்ந்து தருக!’

சந்தகன் நின்று யோசித்தான். மன்னரின் கட்டளையை அவன் மறக்கவில்லை. ஆயினும் இளவரசரை எதிர்த்துரைக்கவும் அவனுக்கு மனம் வரவில்லை. தேவர்களின் உதவியால் அவன் உள்ளம் உறுதி கொண்டது. உடனே சென்று குதிரையைக் கொணர்ந்து நிறுத்தினான்.