பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர் நீங்கு படலம் ⚫ 91

கண்டகம் அசுவ இலக்கணங்கள் அனைத்தும் ஒருங்கே அமைந்த உயர்ந்த குதிரை. அகன்ற முதுகு, உயர்ந்து வளர்ந்த பிடரி, மானின் வயிற்றைப்போல் முதுகுடன் ஒட்டிய வயிறு, அகன்ற நெற்றி, வட்டமாக விரிந்து விசாலமான நாசித் துவாரங்களுடன் விளங்கிய தம் குதிரையைக் கண்டதும், இளவரசர் அதனருகே சென்று, தமது மலர்க்கரங்களால் அதைத் தடவிக் கொடுத்தார்.

‘அசுவ திலகமே! எத்தனையோ போர்களில் என் வீரத் தந்தைக்கு வெற்றி தேடிக் கொடுத்தனை! இப்போது நான் அழியா வாழ்வு பெறச் செல்கிறேன். அதற்கு உன் உதவி தேவை. செல்வச் செழிப்பிலும், போர்க்களத்திலும் நண்பர்கள் கூடுவர். ஆனால் தரித்திரத்திலும், தரும மார்க்கத்திலும் துணைவர் கிடைத்தல் அரிது. ஆயிலும் இப்போது என் உயிருக்கு உலகிலுள்ள எல்லோருமே துணைவராகி விட்டனர். நன்மையிலும் தின்மையிலும் மக்கள் அனைவரும் சகோதரர்களே. ஆகவே எனது உயர்ந்த இலட்சியத்திலும் எல்லோர்க்கும் பங்கு உண்டு. ஆதலால் உலகின் நன்மைக்காகவே நான் போகிறேன். இதில் நீயும் உன் சேவையைச் செம்மையாகச் செய்யவேண்டும்!’ என்று அதற்கு உபதேசமும் செய்தார்.

இளவரசர் குதிரைமீது அமர்ந்ததும், சந்தகன் அடடர்ந்து வளர்ந்திருந்த அதன் வாலைப் பிடித்துத் தொங்கிக் கொண்டான். வெண் மேகம் வானத்தில் விரைந்து செல்வதுபோல் பாய்ந்து சென்றது கண்டகம். அதன் காலோசை கூட எவருடைய செவியிலும் கேட்க வில்லை. வழியிலே சித்தார்த்தர் தந்தையின் அரண்மனை வாயிலை அடைந்ததும், அத்திசை நோக்கி வணக்கம் செலுத்திவிட்டு, விரைவிலே நகர எல்லையை அடைந்தார். கோட்டை வாயில்களும் தாமாகவே திறந்திருந்தன. அவைகளைக் கடந்ததும், நாட்டைத் துறக்கும் நற்றவ-