பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92 ⚫ போதி மாதவன்

மூர்த்தி, கன்னி மதிலும், காவலும் கொண்ட கபிலை நகரை ஒரு முறை நன்றாகத் திரும்பிப் பார்த்தார், ஜனன மரணங்களின் எல்லையைக் கண்டாலல்லாது இந்த அணி நகருக்கு இனித் திரும்பேன்!’ என்ற சொற்கள் அவர் வாயினின்று வெளி வந்தன.

அன்று பூர்ணிமை[1] நிறை மதியின் நிறைந்த ஒளியில் குதிரை மின்னல் வேகத்தில் ஓடிக்கொண் டிருந்தது. இருபத்தொன்பது ஆண்டுகளாகப் பூமியிலே மனிதர் அடையக் கூடிய உயர்ந்த செல்வங்கள் அனைத்தையும் ஒருங்கே பெற்று வாழ்ந்திருந்த சித்தார்த்தர், ஒரு நொடியிலே அனைத்தையும் துறந்து, அந்தக் குதிரை ஒன்றையே துணையாய்க் கொண்டு, நாடும், காடும் கடந்து சென்று கொண்டிருந்தார்.

அன்று முதல் இன்றுவரை சித்தார்த்தரின் இந்தப் பெருந் துறவு ‘மகாபிநிஷ்கிரமணம்’ என்று போற்றப் படுகிறது. அவருடைய இளமை பற்றியும், இத்துறவு பற்றியும் பிற்காலத்தில் போதியடைந்த பின் அவர் தம் சீடர்களுக்கு எடுத்துரைத்த சில விவரங்கள் பௌத்தத் திருமுறைகளிலே காணக் கிடைக்கின்றன. இள வயதில் அவர் தந்தையரின் அரண்மனையில் மிகமிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்ததாயும், தனித்தனியே வெள்ளைத் தாமரை, செந்தாமரை, நீலத் தாமரை மலர்கள் நிறைந்த மூன்று தடாகங்கள் அவருக்காக அமைந்திருந்ததாகவும், காசிச் சந்தனம், காசிப்பட்டு உடைகளைத் தவிர வேறு சந்தனத்தையோ உடைகளையோ அவர் தீண்டியதில்லை என்றும், அவர் இருந்த இடமெல்லாம் இரவும் பகலும் வெண் கொற்றைக் குடை பிடிக்கப் பெற்றதாகவும்,


  1. அன்று ஈசான சகம் 96 (கி.மு.573) வைகாசி மாதம், 3-ஆம் தேதி, வெள்ளிக்கிழமை.