பக்கம்:பௌத்த தருமம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிப்படைக் கொள்கைகள்

125



மார்க்கத்தில் பயமின்றிச் சென்றுகொண்டிருக்க வழி காட்டினார். வெறும் நம்பிக்கையை மேற்கொண்டு, காரியத்தைக் கைவிடலாகாது என்பதை வற்புறுத்தினார். ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை வாங்குவது போல், பிரார்த்தனைகள் செய்து பயன்களைப் பெறலாம் என்ற நம்பிக்கையை அவர் வளர்க்கவில்லை. ஒவ்வொருவரும் தியானத்தின் மூலம் தம்மையே பண்படுத்திக்கொள்ள முடியும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார். எல்லையற்ற பரம்பொருள் என்று வருணிக்கப் புகாமல், மக்கள் ஓரளவு புரிந்துகொள்ளத் தக்க முறையில், துக்க நிவாரணம் என்பது நிருவாண நிலை என்று கூறி, அதை அவர் ஓரளவு விளக்கிக் காட்டினார்.

பிரபஞ்சத்தில் நாம் காண்பவை யாவும் நிலையற்றும், உண்மையற்றும் இருக்குமானால், இவற்றிற்கு எதிரான நிலை ஒன்று இருக்க வேண்டும், பிரபஞ்சம் அதன் நிழலைப் போலவே இருக்கலாம். அது நிலையுள்ள தாயும், சாந்தியுள்ள தாயும், இன்பமுள்ள தாயும் இருக்க வேண்டும். இல்லாவிடில் இந்தப் பிரபஞ்சத்திற்கு அது மாறாக அமையாது. அதுவே நிருவாணம். அநித்தம், துக்கம், அநான்மா, அசுசி ஆகியவற்றிற்கு மாறாக அது அமைந்துள்ளது. ஆனால் புத்தர் பெருமான் அதன் உண்மைகளைப் பற்றியும் விரிவாக விளக்கிக் கூற மறுத்துவிட்டார். மகா சமுத்திரம் உப்புச் சுவை என்ற ஒரே சுவையைப் பெற்றிருப்பது போல் தமது தருமமும் விடுதலைச் சுவை என்ற ஒன்றையே பெற்றிருப்பதாக அவர் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/130&oldid=1386899" இலிருந்து மீள்விக்கப்பட்டது