பக்கம்:பௌத்த தருமம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

பெளத்த தருமம்



கரும நியதி

கரும நியதியும் பௌத்த தருமத்தில் முக்கியமான ஓர் அங்கமாகும். கருமம் என்பது சாதாரணமாகச் செயல் என்று பொருள்படும். இங்கே கருமம் என்பது செயலின் பயனைக் குறிக்கும்.

செயல் என்பது மனம், மொழி, மெய் ஆகிய மூன்றின் தொழிலையும் உணர்த்தும். மனத்தால் நினைப்பதும், மொழியால் உரைப்பதும், மெய்யால் வேலை செய்வதும் செயலாகும். மனத்தின் சிந்தனையே மற்ற இரண்டுக்கும் காரணமாகின்றது. ஒரு சிந்தனை, மொழியாகவோ, உடலின் செயலாகவோ, உருவாகாமலிருந்தாலும், அதுவும் செயலேயாகும்.

வினைப் பயன்கள்

நல்வினை, திவினை ஆகிய இருவினைகளுக்கும் பயனுண்டு; நல்வினைக்கு நல்ல பயனும், தீவினைக்குத் தீய பயனும் ஏற்படும். வினைப் பயனை ஒவ்வொரு வரும் அநுபவித்தே யாகவேண்டும். ஒருவனுடைய நிழல் அவனைத் தொடர்வது போலவும், மாட்டைத் தொடர்ந்து வண்டிச் சக்கரம் செல்வது போலவும், வினைப்பயன் மனிதனைத் தொடர்ந்து சென்று கொண்டே யிருக்கும். சாதாரணமாக உலக வாழ்வில் நாம் செய்யும் செயல் ஒவ்வொன்றின் பயனையும் உடனுக்குடன் பார்க்கிறோம். அதிகமாக உணவு உண்டால், அஜீரணம் ஏற்படுகின்றது; நோய் ஏற்படுகையில் உபவாசமிருந்தால், அது விரைவில் குணமாகின்றது. இத்தகைய பயன்களைப்போலப் பின்னால் அநுபவிக்க வேண்டிய வினைப் பயன்களும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/131&oldid=1386901" இலிருந்து மீள்விக்கப்பட்டது