பக்கம்:பௌத்த தருமம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிப்படைக் கொள்கைகள்

127



மனிதன் மரிக்கும்போது அவன் உடல் தான் அழிகின்றதேயன்றி, உலகிலே அவன் செய்த செயல்கள் அவனோடு அழிந்து விடுவதில்லை. அவனுடைய செயல்களால் ஏற்பட்ட பயன்கள் மக்களிடையே நெடுங்காலம் நிலைத்து நின்று, மக்களின் வாழ்க்கையோடு கலந்துவிடுகின்றன. ஒருவன் கட்டிய கட்டிடங்கள், ஒருவன் போதித்த போதனைகள், ஒருவன் செய்த உதவிகள், ஒருவன் சமூகத்திற்குச் செய்த தீங்குகள், ஒருவன் சிந்தித்த சிந்தனைகள் ஆகியவை அவைகளின் கருத்தாக்கள் மறைந்த பிறகும் நின்று சமூகத்திற்கு நன்மையோ தின்மையோ செய்து வருவதை நாம் காண்கிறோம்.

'மனிதன் தன் பாவ கருமத்தின் பிடியிலிருந்து தப்பவே முடியாது; தப்பித்துக் கொள்ளும் இடம் பரந்த வானத்திலும் இல்லை, ஆழ்ந்த கடலிலும் இல்லை, மலையின் குகைகளிலும் இல்லை' என்று புத்தர் கூறியுள்ளார். இது போலவே நற் கருமத்தின் பயனும் மனிதனைவிட்டு நீங்குவதில்லை. ஆகவே கரும விதி - வினைப்பயன் - என்பது வெளியிலிருந்து யாரோ விதிப்பதன்று, ஒவ்வொருவனும் தன் கரும விதியைத் தானே நிர்ணயித்துக்கொள்கிறான். முந்திய பிறவியில் செய்த கருமத்தின் பயனை இந்தப் பிறப்பில் அதுபவிக்கிறான்; இந்தப் பிறப்பில் செய்த கருமத்தின் பயனை அடுத்த பிறவியில் அநுபவிக்கிறான்.

கருமவிதி மாற்ற முடியாத தலைவிதி அன்று. அது இரண்டு பகுதியாக உள்ளது; ஒன்று முற்பிறப்பின் வினைப்பயனை இப்போது அநுபவித்தல், மற்றது


  • 'தம்ம பதம் '
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/132&oldid=1386909" இலிருந்து மீள்விக்கப்பட்டது