பக்கம்:பௌத்த தருமம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

பெளத்த தருமம்


கருத்தால் ஆராய்ந்து, அது பகுத்தறிவுக்குப் பொருத்தமாயும், சகலருக்கும் நன்மை பயக்கக்கூடிய தாயும் இருந்தால், அதை ஏற்றுக்கொண்டு, அதன் படி நடக்கவும்’.[1]

நால்வகை வாய்மைகள்

பெளத்த தருமத்தின் மூலாதாரமான கொள்கைகள் நான்கு. அவை துக்கம், துக்க காரணம், துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் என்ற நான்கு வாய்மைகள் (சத்வாரி ஆரிய சத்தியங்கள்) எனப்படும்.

துக்கம்

உலக வாழ்வு துக்கமயமானது என்பது முதலாவது உண்மை. பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு, சாக்காடு எல்லாம் துன்பமே. அன்புக்குரியவர்களைப் பிரிதல் துன்பம், அன்பற்றவர்களின் தொடர்பும் துன்பம். விரும்பியவைகளைப் பெறாமை துன்பம், விரும்பாதவைகளை அடைதலும் துன்பம். ஐம்புலன்களின் வழியே அறிந்து ஆசைகொண்ட யாவும் துன்பத்திலேயே முடிகின்றன. ஒரு சமயம் இன்பமாகத் தோன்றுபவைகளும், பின்னால் துன்பமாக உணரப்படுகின்றன. வாழ்விலே பற்றுக்கொண்ட பொருள்களையும் உற்றார் உறவினரையும் விட்டுப் பிரிக்கும் மரணம் பெருந் துன்பமாகவே கருதப்படுகின்றது. மரணத்தின் உண்மையான காரணம் பிறப்பே. உலகில் தோன்றிய எல்லாம் மாறி நசித்தலே இயல்பு. எனவே மரணத்திற்கும் மற்ற வேதனைகளுக்கும் காரணமாயுள்ளது பிறப்புத்தான். ஐந்து கநதங்கள் சேர்ந்து தோன்றிய உடலைப் பெறுவது பிறப்பு. துக்கத்திற்குக் காரணம் பிறப்பு


  1. 1. ‘காலாமா சூத்திரம், அங்குத்தா நிகாயம்.’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/25&oldid=1387250" இலிருந்து மீள்விக்கப்பட்டது