பக்கம்:பௌத்த தருமம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

பெளத்த தருமம்


சட்டம் - விதி - ஒன்று இருக்கின்றது; ஒன்றுக்கொன்று காரண-காரியத் தொடர்பாகவே எல்லாம் அமைந்துள்ளன; ஒரு பொருளின் பிந்திய நிலைமை முந்திய நிலைமைகளைக் காரணமாகக் கொண்டவை. நன்மை, தீமை, இன்பம், துன்பம், ஒழுக்கம், ஒழுக்கமின்மை-யாவும் காரணங்களால் தோன்றுபவை.

இந்நிலையில் மனிதன் தன்னைமட்டும் நிலையானவன் என்று கருதுவது எவ்வளவு பேதைமை! அவனுடைய அவா, நிலையற்ற துன்பகரமான வாழ்வையும் விரும்பும்படி செய்கின்றது. மெய்யான அறிவைப் பெறாததால், அவன் உண்மை நிலையை உணர முடியாமல் தத்தளிக்கிறான். அவா காரணமாக வாழ்வில் அவன் பற்றுக்கொள்கிறான். பற்றினால் பல செயல்களைச் செய்கிருன். அந்த வினைகளின் பயன் ஒருமிக்கச் சேர்ந்து, அந்த வினைப்பயனை அநுபவிக்க அவன் மீண்டும் மீண்டும் பிறவியெடுக்க நேருகின்றது.

அவாவே மனிதனின் துக்க காரணமாயுள்ளது. அதனாலேயே வள்ளுவப் பெருந்தகையும்,

‘அவாஎன்ப எல்லா உயிர்க்கும், எஞ் ஞான்றும்,
தவாஅப் பிறப்பீனும் வித்து’

என்று கூறியுள்ளார். பிறப்புக்கு வித்து அவா. அவாவுக்கு மூல காரணம் பேதைமையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/33&oldid=1387253" இலிருந்து மீள்விக்கப்பட்டது