பக்கம்:மகான் குரு நானக்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

17


நானக் தந்தையார் தனது சத்திரிய பழக்க வழக்கத்திற்கு ஏற்றவாறு மகனுக்கு பூணூல் விழா நடத்திட எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். பூணூல் விழாவன்று பூணூல் அணிவிக்கும் பார்ப்பனர் வந்தார். ஓமம் வளர்க்கப்பட்டது. சடங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து கொண்டிருந்தன. மந்திரங்கள் ஒதப்பட்டன. பிறகு புரோகிதர் அரிதயாள் பூணூலைக் கையிலெடுத்தார்.

நானக் அதைத் தடுத்து நிறுத்தினார். விழாவிற்கு வந்தவர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக 'அபச்சாரம் அபச்சாரம்' என்று முணுமுணுப்பு ஒலிகளை எழுப்பினார்கள். அப்போது நானக் புரோகிதரை நோக்கி, 'ஐயா புரோகிதரே. எதற்காக நான் பூணூல் போட்டுக் கொள்ள வேண்டும்? காரணம் என்ன?' என்று கேட்டார்.

இந்தக் கேள்வி புரோகிதரை கேட்ட கேள்வி மட்டுமா? விழாவிற்கு வந்திருந்த பெரியோர்களையும், பரம்பரையாகப் பூணூல் அணிந்து வருபவர்களையும் கேட்ட கேள்வி அல்லவா இது? எனவே, விழாவுக்கு வருகை தந்திருந்த எல்லாரிடமும் நானக் கேட்ட கேள்வி, ஒரு வித திடுக்கிடும் தோற்றத்தை உருவாக்கிவிட்டது.

புரோகிதர், பூணூல் போட்டுக் கொள்வதற்கான விவரங்களை எல்லாம் சுருக்கமாக நானக்கிடம் கூறினார். சிறு பையனுக்குப் புரோகிதர் பதில் கூறிக் கொண்டிருப்பதை பழமை விரும்பிகள் ஓர் அருவருப்பாகவே கருதினார்கள். அன்று வரை பூணூலணிவதற்குரிய காரணங்களைக் கேட்டறியாதவர்கள் எல்லாம் சிறுவன் கேட்ட கேள்வியால் சரியான பதிலைத் தெரிந்து கொண்டார்கள்.

ஆனால், நானக்குக்கு மட்டும் புரோகிதர் கூறிய விளக்கம் மன நிறைவை அளிக்கவில்லை. ஆனால், நானக்கிடம் இருந்த இறையுணர்வு ஒரு பாடலாக அங்கே எழுந்தது. அவர் பாடினார். அந்தப் பாடலின் கருத்து என்ன தெரியுமா?