பக்கம்:மகான் குரு நானக்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

59


சீன நாட்டு ஞான மாமன்னன் கன்பூசியஸ். பேசிய வித்தக விவேக தத்துவ ஞானங்களை அவனுக்குப் பிறகு வந்த சீனப் பேரறிவாளர்கள் எழுதி வைத்தவைதான் இன்று கன்பூசியஸ் மதமாக, தத்துவங்களாக உலகம் நம்பி ஏற்று உணர்கின்றது.

கெளதம புத்தர் தனது உபதேசங்களை எழுதி வைத்து விட்டுச் செத்தவரல்லர் அவர் உயிரோடு வடபுலத்தை உலாவந்த போது, எனது போதனைகள் எல்லாமே பெளத்த மதச் சிந்தனைகள்தான் என்று கூறவில்லை. அவர் மக்கள் வாழ்க்கை உய்திடுவதற்கான அறிவுரைகளை, கூறினார். அவ்வளவுதான்!

அந்த சித்தார்த்த மகானுக்குப் பிறகு வந்த அவரது வாரிசுகள் அவருடைய அறிவுரைகளைத் தொகுத்து புத்தமதம் என்ற பெயரைச் சூட்டி விட்டார்களே தவிர, சித்தார்த்தன் வைத்த திருப் பெயரல்ல பெளத்தம் என்ற மதச்சொல்!

அதே போன்று சமணமும், மகா வீரரின் பெயரால் தொகுக்கப் பட்ட அறவுரைகளே தவிர, மகாவீரரால் சமணமதம் என்று பெயர் கொடுக்கப்பட்டு அந்த மகானால் எழுதி வைக்கப்பட்ட சான்றுகள் அல்ல!

இவ்வளவு ஏன்? கிறித்துவ மதம் இயேசுநாதரால் நிறுவப்பட்ட மதம் என்பதற்கு ஏதாவது சான்று உள்ளதா? அவருக்குப் பிறகு வந்தோர் மூன்று நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரவர்கள் கேட்டதை விசாரித்ததை எழுதி வைத்தார்களே தவிர இயேசுவைக் கண்ணால் பார்த்தவர்கள், அவர் அருளிய அறிவுரைகளைச் செவிகளால் கேட்டவர்களா எழுதி வைத்தார்கள்? இல்லை இயேசு பெருமான்தான் எழுதி வைத்தாரா?

சத்குரு நானக், படியாதவராக இருந்தாலும், ஒரு நாள் பள்ளி மாணவராக இருந்தாலும், அவருடைய சீடர்களிலே பாலா சத்குரு அருளாசி பெற்ற ஒரு நல்ல ஞான உரை தொகுப்பாளனாக விளங்கினான். பாலா நானக்குடன் இறுதிக்காலம் வரை சென்றிராமல் இருந்திருந்தால் சீக்கிய மதபோதகரின் அறிவுப் புதையல்கள் நமக்குக் கிடைத்திருக்குமா?

ஆனால் ஒன்று இங்கே கூற வேண்டி உள்ளது. திருவள்ளுவர் பெருமானின் பொதுமறை, எவராலும் தொகுக்கப்பட்ட நூலன்று: