பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/100

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
98
அறத்தின் குரல்
 

பலதரப்பட்ட இகழ்ச்சிக் குரல்களும் கேட்டன. துட்டத்துய்ம்மன் அவையை அமைதியடையுமாறு செய்துவிட்டு, மாறுவேடத்திலிருந்த அர்ச்சுனனின் கேள்விக்குப் பதில் கூறினான். ‘அந்தணர் திலகமே! உங்கள் கேள்வியை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். அந்தணர்களுக்கும் இதில் பங்கு கொள்ள உரிமையுண்டு, உங்களில் எவரேனும் நிபந்தனையை நிறைவேற்றினால், அவ்வாறு நிறைவேற்று பவருக்குத் திரெளபதியைத் தடையின்றி மணம் செய்து கொடுக்கிறேன். இது உறுதி’ -துட்டத்துய்ம்மன் மறு மொழியை முற்றிலும் கூறி முடிப்பதற்குள்ளேயே அர்ச்சுனன் வில்லும் பொறியும் அமைந்திருந்த மேடையை அடைந்து விட்டான்.

சுற்றி வீற்றிருந்த அரசர்களின் கண்களில் பொறாமையின் சாயையும் இகழ்ச்சியின் சாயையும் ஒருங்கே இலங்கின. ஆனால், அவர்களுடைய இகழ்ச்சியும் பொறாமையும் தூள் தூளாகச் சிதறிப் போகும்படியான காரியத்தை அடுத்த விநாடியிலேயே அவன் செய்து முடித்தான். வெகுநாள் பழக்கப்பட்டவனைப் போல எடுத்த வேகத்தில் அந்த வில்லை நாணேற்றிக் குறி தவறாமல் அம்பெய்து இயந்திரப் பொறியை அறுத்து வீழ்த்தினான். அப்போது இயந்திரப் பொறி மட்டுமா அறுந்து வீழ்ந்தது? இல்லை! இல்லை! அங்கே கூடியிருந்த மன்னர்களின் மனத்தில் இருந்த அலட்சியம் என்ற உணர்ச்சியும் அறுந்து வேரற்றுக் கீழே விழுந்தது. அவையிலிருந்த ஏனைய அந்தணர்களின் கூட்டம் தங்களில் ஒருவனுக்கு வெற்றி கிடைத்ததற்காக மகிழ்ச்சி ஆரவாரம் செய்தது ‘கேவலம் ஒரு அந்தண இளைஞன் அரசர்களும் அடைய முடியாத வெற்றியை அடைந்து விட்டானே’ என்று கூடியிருந்த அரசு குலத்தினர் மனம் பொருமினர்.

கையில் வளைத்த வில்லுடன் பெருமிதம் விளங்க நின்று கொண்டிருந்தான் அர்ச்சுனன். திரெளபதி ஓரக் கண்களால் தொலைவில் நின்றவாறே அவன் அழகைப் பருகிக்