பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/309

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
307
 


“வேறொன்றுமில்லை தருமா! உங்கள் மேலுள்ள அன்பால் உங்களுக்குச் சில நற்செய்திகளை உபதேசம் செய்துவிட்டுப் போக வந்தேன். கெளரவர்களிடமிருந்து உங்கள் நாட்டையும் ஆட்சியையும் கைப்பற்றி மீண்டும் ஆளவேண்டும் என்ற ஆசை உங்களுக்குத் தோன்றியிருத்தலை அறிகிறேன். அப்பா தருமா! ஆசையின் விளைவு பாவம். பாவத்தின் விளைவு நரகம். நாடாளும் ஆசையால் உங்களுக்கும் துரியோதனனுக்கும் இடையே ஒற்றுமை குலைந்து போர்தான் மலியும். இந்தப் பாழும் ஆசையைக் கைவிட்டு விட்டு மறுபடியும் காட்டுக்குப் போய்த் தவம் செய்து மோட்ச மார்க்கத்தை அடையுங்கள். என் உபதேசத்தை நீங்கள் ஒரு போதும் மறுக்க மாட்டீர்கள். நான் சொல்கிறபடி கேளுங்கள். அதுதான் நல்லது.” முனிவன் கெளரவர்களின் சூழ்ச்சியால் உருவாகி வந்திருக்கிறான் என்பதை தருமன் புரிந்து கொண்டான்.

“முனிவரே! பழியை அழித்துப் புகழை நிலை நாட்டுவது தான் தவம். அரசாளுவது எங்கள் குலதருமம், அதை இன்னொருவனிடம் பறி கொடுத்துவிட்டோம். இன்று மீட்கத் துடிக்கின்றோம். இது முறையான ஆசை தான். இதை நிறைவேற்ற நாங்கள் தயங்கப் போவதில்லை. உங்கள் மொழிகளை மீறுவதற்காக மன்னியுங்கள்...” என்றான் தருமன். தருமனைவிட வீமன் அதிகமாகச் சினம் கொண்டு விட்டான்.

“ஏ! முனிவனே, நீ வெறுப்பும் விருப்புமின்றி உபதேசிக்க வேண்டிய ஞானாசிரியன். கேவலம், கெளரவர்களின் சூழ்ச்சியை ஏற்றுக் கொண்டு எங்களை மீண்டும் காட்டிற்குத் துரத்த வந்திருக்கிறாயே? போருக்கு தயாராக இருப்பதாக நேற்று உலூகனிடம் கூறியனுப்பிய கௌரவர்கள் அதற்குள் ஏன் இத்தகைய சூழ்ச்சிகளிலே ஈடுபட்டிருக்கிறார்கள்? திருதராட்டிரனுக்கு இந்த ஓரவஞ்சகம் அடுக்குமா? நீ தவம்தானே செய்யவேண்டுமென்கிறாய்? போர்க் களத்தில் இந்தக் கதாயுகத்தைக் கொண்டு பகைவர்களைப் புடைத்து