பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/323

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
321
 


துரோணர் முதலிய மற்றப் பெரியவர்களும் பேசாமல் இருந்து விட்டனர். கர்ணன் தான் அவன் பேச்சை ஆதரித்துப் பேசினான். எத்தகைய சந்தர்ப்பத்திலும் துரியோதனனை ஆதரித்துப் பேசுவதே அவன் வழக்கம். “விதுரனுடைய கைவில் முறிந்து விட்டதே என்று இங்கு யாரும் கவலைப்பட வேண்டாம். பாண்டவர்களை முறியடித்துத் துரத்த என் கைவில் ஒன்றே போதுமானது. விதுரனை இழந்ததனால் பெரிய நஷ்டம் என்று வீட்டுமர் கதைக்கிறார். அர்ச்சுனனை எதிர்க்க நம் பக்கம் ஆளே இல்லை என்கிறார். அர்ச்சுனனைக் கொல்வதற்கென்றே என்னிடத்தில் நாகாஸ்திரம் வளர்ந்து வருகிறது. அர்ச்சுனனை அழித்துப் பாண்டவர்களை ஓட ஓட விரட்டித் தோல்வியுறச் செய்ய நான் ஒருவனே போதும்.” கர்ணனின் அகம்பாவம் மிகுந்த இந்தப் பேச்சு வீட்டுமன் மனத்தைச் சற்றே பாதிக்கத்தான் செய்தது.

“இந்திரனால் வெல்லமுடியாத அரக்கர்களை எல்லாம் வென்று வாகைசூடி வானுலகத்தின் ஏகோபித்த புகழை முற்றிலும் பெற்று வந்திருக்கிறான் அர்ச்சுனன். அவன் உனக்குத் தோற்பான் என்று நீ கனவு காண்பது. ‘சந்திரன் விடிவெள்ளியை விடச் சிறிது’ என்று எண்ணுவது போலப் பேதைமை நிறைந்தது. அர்ச்சுனனும் நீயும் நேருக்கு நேர் நின்று போர் செய்தால் ‘நீ வில்லை இதற்கு முன் தொட்டிருக்கிறாய்’ என்று கூடக் காண்பவர்கள் நம்பமாட்டார்கள்” என்றான் வீட்டுமன்.

“நீங்கள் எல்லாம் நன்றியுள்ள மனிதர்கள் தாமா? துரியோதனன் இட்ட சோற்றை உண்டு வளர்ந்து விட்டு துரியோதனனுக்கே துரோகம் பேசுகிறீர்களே? விதுரனைப் போலவே நீயும் பாண்டவர்களை ஆதரிக்கிறாய்! ‘எனக்கு விற்போரே தெரியாது; நான் கற்றுக் குட்டி’ என்று இகழ்கிறாய்! அர்ச்சுனன் மட்டும் என்ன? அவனினும் சிறந்த வில்லாளர்களை வேண்டுமானால் என்னோடு போருக்கு அனுப்பிப்பார். திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளையே என் வில்லுக்குப் பயப்பட வைத்தவன் நான். கேவலம்; இந்தப்

அ.கு.-21