பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

அறத்தின் குரல்

பாண்டவர்கள் எம்மாத்திரம்?” என்று கர்ணன் மீண்டும் நெருப்பைக் கக்கினான். ஆனால் இம்முறை வீட்டுமன் பதிலே கூறவில்லை. கர்ணனின் பேச்சு துரியோதனனை மகிழ்வித்தது. நீண்ட நேர அமைதிக்குப் பின்னர் அவை அன்றைக்கு இவ்வளவில் கலைந்தது.

அவையில் துரியோதனனைப் பகைத்துக் கொண்டு வில்லை முறித்துவிட்டு வந்த விதுரனும், கண்ணபிரானும் தனிமையில் சந்தித்தனர். கண்ணன் ‘அவையில் கோபம் கொண்டதற்கு என்ன காரணம்’ என்று விதுரனை விசாரித்தான். ‘ஆராய்ச்சி அறிவு இல்லாதவர்கள், அமைச்சர்கள் சொற்களைக் கேட்காதவர்கள், நாவடக்கமில்லாதவர்கள் ஆகியவர்களோடு பழகவே கூடாது. தனக்குத் தோல்வியே வராது என்றும் பாண்டவர்கள் தாம் நிச்சயமாகத் தோற்பார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருக்கிறான் துரியோதனன், உன்னையும் உன்னை வரவேற்று விருந்தினனாகப் பேணிய குற்றத்திற்காக என்னையும் அளவு கடந்து அவன் இழிவாகப் பேசினான். என்னால் பொறுக்க முடியவில்லை. இனி இப்படிப் பட்டவன் பழக்கமே வேண்டாம் என்று கருதி வில்லை முறித்துப் போட்டு விட்டு வந்து விட்டேன்.”

“இதுவும் ஒருவிதத்தில் நன்மைக்குத்தான். துரியோதனாதியர்கள் பக்கம் நீ இல்லையென்றால் பாண்டவர்கள் சுலபமாக அவர்களைத் தோற்கச் செய்து விடுவார்கள். தீ பற்றி எரிய நெருப்பு, விறகு, நெய், எல்லாம் இருந்தாலும் காற்றில்லாவிட்டால் பயனில்லை. சுலபமாக அவித்து விடலாம். நீ இல்லாத கெளரவர்சேனை காற்றில்லாத நெருப்புப் போல ஆகும். பாண்டவர்கள் அதைச் சீக்கிரமே அணைத்துச் சின்னாபின்னமாக்கி விடப் போகிறார்கள்.” விதுரனைப் பார்த்து மகிழ்ச்சி நிரம்பிய மனத்தோடு கண்ணன் இப்படிக் கூறினான். வந்த இடத்தில் தூது வேலை முடிந்து விட்டது. ஆனால் கண்ணன் தூது வேலையைத் தவிர வேறு சில வேலைகளையும் அங்கே செய்ய வேண்டியிருந்தது.