பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/414

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
412
அறத்தின் குரல்
 

காகக் கெளரவ சேனையிலிருந்து ஆயிரக்கணக்கான அரசர்கள் பாய்ந்தோடி வந்து கொண்டிருந்தனர். பாண்டவர்களின் படைத் தலைவனான துட்டத்துய்ம்மன் இதைப் பார்த்து விட்டான். மண்டலத்தைக் கலையவிட்டுவிடக் கூடாது என்ற கடமை உணர்ச்சியோடு பாஞ்சால வீரர்கள் அடங்கிய பெரும்படையினால் துரோணரையும் அவர் கோஷ்டியையும் எதிர்த்தான். மாரிகாலத்துக் காட்டாற்று வெள்ளம் போல் அலை பாய்ந்து வந்த துரோணரும் அவர் படை வீரர்களும் சின்னா பின்னமாகச் சிதறி ஓடுமாறு செய்தான் துட்டத்துய்ம்மன். இறுதியில் உயிரோடு எஞ்சியவர்கள் துரோணரும் அவரருகில் நின்ற மிகச் சில வீரர்களுமே!

தன் படையில் பெரும்பகுதி அழிந்துவிட்டதைக் கண்ட துரோணருக்கு மனம் குமுறியது. ஆத்திரத்தோடு மீண்டும் எதிர்த்துப் போர் புரிந்தார். இம்முறை போரில் அவர் கை ஓங்கி விட்டது. பாண்டவர்களைச் சேர்ந்த பலர் துரோணரின் தாக்குதலுக்கு ஆற்றாமல் தளர்ந்தனர். துருபதன், நகுலன், சகாதேவன் ஆகிய வலிமை வாய்ந்த வீரர்களைத் துரோணர் தோற்று ஓடும்படி செய்துவிட்டார். தருமனைச் சுற்றி நின்ற பாஞ்சால நாட்டு வீரர்கள் கூடப் பின்வாங்கி விட்டனர். தருமன் ஏறக்குறைய தனியனாக விடப்பட்டான். இந்த ஏகாந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு துரோணர் தருமனை நேருக்கு நேர் போருக்கு அழைத்தார். அவனும் மறுக்கவில்லை. தருமனும் துரோணரும் தத்தம் படைகளோடு நேரடியாகப் போரிலே இறங்கினார்கள். பார்க்கப் போனால் தருமன் துரோணருடைய மாணவன் தான். ஆனால் துரோணருக்குச் சிறிதும் சளைக்காமல் போரைச் செய்தான். வெகு விரைவிலேயே வில்லை இழந்து தேரை இழந்து வெறுந்தரையில் நிராயுதபாணியாக நிற்கவேண்டிய நிலை துரோணருக்கு ஏற்பட்டு விட்டது. அந்த நிலையில் மேலும் தொடர்ந்து அவரைத் துன்புறுத்த விரும்பாத தருமன், “துரோணரே, நீர் என் ஆசிரியர்! உம்மைப்