பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/437

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
435
 

எய்த முதல் அம்பு அபிமன்னனுடைய வில்லை இரண்டாக முறித்துக் கீழே தள்ளியது. பின் தொடர்ந்து தேர், தேரின் குதிரைகள் என்று கர்ணன் ஒவ்வொன்றாக அழித் தொழித்தான். அபிமன்னன் திடுக்கிட்டான்! எனினும் செய்வதற்கு ஒன்றுமில்லை. ஒரே ஒரு வாள் மட்டும் அவன் கையில் எஞ்சியிருந்தது. அதை உருவிக் கொண்டு தரையில் குதித்தான் அவன். அபிமன்னனுடைய வலது கையில் உருவிய வாளும் இடது கையில் கேடயமும் இருந்தன. சுற்றிச் சுழன்று நின்றவர்களை நோக்கிக் கத்தியைச் சக்ராகாரமாக வீசினான். எதிரிகள் படைக்குத் தலைமை தாங்கி முன்பு தோற்றோடிப் போன பல அரசர்கள் இப்போது மீண்டும் ஓடிவந்து அபிமன்னனை எதிர்த்தனர். தன்னுடைய நிராதரவான நிலையை எண்ணிச் சிறிதேனும் கலங்காத அபிமன்னன் வாளை இடைவிடாமல் சுழற்றிக் கொண்டிருந்தான். துரோணருடைய வில் அவனை நோக்கி அம்புமாரி பொழிந்தது. வாட்போர் செய்கிறவன் மேல் அம்புகளைச் செலுத்தக்கூடாதென்பது போர் முறை. ஆனால் எப்படியாவது அபிமன்னனைக் கொன்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் அவன் மேல் அம்புகளைத் தூவினார் துரோணர் பிறைச் சந்திரனைப் போன்ற உருவமுள்ள அம்பு ஒன்றை எடுத்து அபிமன்னனின் வலது கையைத் துண்டித்து விட்டார். துரோணரின் இந்தக் கொடுஞ் செயலால் வாளேந்திய அபிமன்னனின் கை அறுந்து குருதி சோரக் கீழே விழுந்தது. அபிமன்னனின் முடமான வலது கை துடிதுடித்தது. இடது கையால் சக்ராயுதம் ஒன்றை எடுத்து வேகமாகச் சுழற்றினான் அவன். அப்போது அவனை எதிர்த்த பலர் தலைகளை இழக்க நேரிட்டது. அபிமன்னன் சக்ராயுதத்தால் பலரைக் கொல்வதைக் கண்டு மனம் கொதித்தான் துரியோதனன். தாங்களும் தங்கள் படைகளும் பிழைக்க வேண்டுமானால் அபிமன்னனைக் கொன்றாலொழிய வேறு வழியில்லை என்று அவனுக்குத் தோன்றியது. கதாயுதத்தால் அபிமன்னனை அடித்துக் கொன்றுவிடுமாறு