பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/45

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
43
 


தபோவனத்து முனிவர்களாலும் ஆறுதலும் தேறுதலும் பெற்றுத் தந்தையிழந்த துயரத்தை மறந்து வந்தனர். பாண்டுவுக்கும் மாத்திரிக்கும், செய்ய வேண்டிய கிரியைகளை யெல்லாம் முடித்த பின்பும் குந்தியும் பாண்டவர்களும் துயரம் நிறைந்த வருத்தச் சின்னமாகத் தோன்றும் அந்த தபோவனத்தில் தங்கியிருப்பது நல்லதல்ல - என்று எண்ணினர் அங்கிருந்த மற்ற முனிவர்கள். வருத்தம் நிகழ்வதற்கு இடமாக அமைந்தது அந்தத் தபோவனம். இனியும் அங்கே தங்குவதனால் அவர்களுடைய வருத்தம் வளரலாமே தவிரக் குறைய முடியாது. ஆகையால் குந்தியும் பாண்டவர்களும் வருத்தத்தை மறந்து ஆறுதல் பெற வேண்டுமானால் தங்கள் உறவினர்களோடு அத்தினாபுரியிற் சென்று தங்கியிருப்பதே சிறந்தது என்று முடிவு செய்தனர் தபோவனத்தில் உள்ளோர்.

காசியர் முதலிய முனிவர்கள் குந்தியையும் பாண்டவர் களையும் தலைநகரமாகிய அத்தினாபுரிக்கு அழைத்துக் கொண்டு வந்து திருதராட்டிர மன்னனிடம் விட்டு விட்டுச் சென்றனர். திருதராட்டிரன் தம்பியின் புதல்வர்களையும் மனைவியையும் கண்டு அவன் மறைவிற்காகக் கண்ணீர் விட்டுக் கலங்கினான். தன் திருவடிகளிலே விழுந்து வணங்கிய தம்பியின் புதல்வர்களை மார்புறத் தழுவி மகிழ்ந்த காட்சி திருதராட்டிரனது பாசத்தை வெளிப்படுத்தும் இயல்பினதாக இருந்தது. பாட்டனாகிய ‘வீட்டுமன்’ சிறிய தந்தையாகிய விதுரன் முதலியோரும் பாண்டவர்களையும் ஆதரவும் ஆறுதலும் கூறிப் போற்றி வரவேற்றனர். ஐவரும் நூற்றுவரும் சகோதர பாசத்துடனே நெருங்கிப் பழகினர். ஒரே பொய்கையில் தாமரை மலர்களும் அல்லி மலர்களும் நெருக்கமாக மலர்ந்து கொழித்து வளர்ந்தாற் போலப் பாண்டவர்களும் கெளரவர்களும் அன்புடன் நேயம் பெருக்கி வாழ்ந்தனர். பெருகி வளர்ந்து வந்த இந்த நட்புப் பிற்கால வெறுப்பிற்குக் காரணமாக அமைந்ததுவோ என்னவோ?