பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/460

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
458
அறத்தின் குரல்
 

மானைத் தியானித்துக் கொண்டே அந்த அஸ்திரத்தை, ஆழப்பதியுமாறு தரைக்குள்ளே செலுத்தினான். மறுகணம் அஸ்த்ரம் தரையைத் துளைத்தது. அதன் மாயாசக்தியால் போர்க்களத்தின் நடுவே அவர்களுடைய தேருக்கு அருகில் ஒரு மாயப் பொய்கை உண்டாயிற்று. பேரளவாக நீர் நிறைந்து பரந்து தோன்றிய அந்தப் பொய்கையில் இறங்கிக் குதிரைகளுக்குத் தண்ணீர் காட்டினான் கண்ணன். பின்பு அவர்கள் இருவருமே குளத்தில் இறங்கி அதுவரை போர் செய்த களைப்பும் வியர்வையும் தீரும்படியாகக் கைகால் முகங்கழுவிக் கொண்டு தண்ணீர் பருகினர். அங்கேயே குதிரைகளை விட்டுவிட்டுச் சிறிது நேரம் களைப்பைப் போக்கி ஓய்வு கொள்ள விரும்பித் தங்கினார்கள். அர்ச்சுனனும், கண்ணனும் பலரை வென்று முன்னேறி போர்களத்தினிடையே மாயப் பொய்கை உண்டாக்கி ஓய்வு கொண்டிருக்கும் செய்தியை போர்க்களத்து ஒற்றர்கள் துரியோதனனிடம் போய்க் கூறிவிட்டார்கள். துரியோதனருக்கு ஒரேயடியாகப் பயம் தோன்றிவிட்டது. ‘அர்ச்சுனன் முன்னேறிக் கொண்டு வருகிற விதத்தைப் பார்த்தால் எப்படியும் இன்று மாலைக்குள் சத்திரதனுடைய தலை பிழைப்பது அருமை என்றல்லவா தோன்றுகின்றது?’ -அவன் சயத்திரதனின் உயிர்மேல் இவ்வளவு அக்கறை கொண்டதற்குக் காரணம் வேறொன்றுமில்லை. துரியோதனனுடைய தங்கையாகிய துச்சளை என்பவள்தான், சயத்திரதனுடைய மனைவி. சத்திரதன் இறந்துவிட்டால் தன் அருமை தங்கை கணவனை இழக்க நேரிட்டு விடுமே என்று அஞ்சியே இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அவன் செய்திருந்தான். இப்போது கண்ணனும் அர்ச்சுனனும் பொய்கைக் கரையில் இளைப்பாறுகிறார்கள் என்று அறிந்தவுடன் துரியோதனன் விஷயத்தைக் கூறி அவர்களை எதிர்ப்பதற்காகத் துரோணரைத் தேடிக்கொண்டு சென்றான். துரோணரைக் கண்டதும் அவரிடம் சினத்துடனே பேசலானான்:-