பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

466

அறத்தின் குரல்

கர்ணனுக்கு ஒருவிதமான சேதத்தையும் உண்டாக்கவில்லை. அருகிலிருந்த கர்ணனின் புதல்வன் தன்னுடைய தேரை உடனே தகப்பனுக்குக் கொடுத்துவிட்டுத் தான் கீழே இறங்கிக் கொண்டான். மகனுடைய தேரில் ஏறிக் கொண்ட கர்ணன் ஆத்திரத்தோடு மீண்டும் வீமனோடு போர் செய்தான். ஆனால் வீமன் இப்போதும் அவனுக்குத் தோல்வியையே கொடுத்தான். கர்ணனும் வீமனிடம் தோற்றதைக் கண்ட துரியோதனன் தானே தன்னுடைய தம்பிமார்களில் இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு வீமனை எதிர்க்க வந்தான். துரியோதனன் தம்பியர்களுடன் வருவதைப் பார்த்த வீமன், ஆரவாரம் செய்து கொண்டே தோள் கொட்டினான். முதலில் துரியோதனனோடு வந்த அவன் தம்பியரிருவரையும் விண்ணுலகுக்கு அனுப்பிவிட்டுத் துரியோதனனோடு நேரடிப் போரைத் தொடங்கினான். வீமனுக்கும் துரியோதனனுக்கும் நிகழ்ந்த போரில் ஆரம்பத்தில் துரியோதனனுடைய கை ஓங்கியிருந்தாலும் முடிவில் வீமன் கையே வென்றது. துரியோதனன் சகோதரர்களில் ஒருவனான துன்முகன் வீமனை எதிர்க்க முயன்று மாண்டான். வீமன் இவ்வாறு மேலும் மேலும் வென்று கொண்டே போவதைப் பார்த்த கர்ணன் தான் முன்பு வீமனுக்குத் தோற்றவன் என்பதையும் மறந்து ஒரு பெரிய கைவேலாயுதத்தை எடுத்து வீமன் மேல் எறிந்தான். வீமனோ அம்புகளால் அந்த வேலாயுதத்தைத் தடுத்துக் கீழே விழச் செய்துவிட்டான். இதன் பிறகு உயிரோடு மீதமிருந்த துரியோதனனின் தம்பிமார்களில் இன்னும் ஓர் ஆறு பேர் வீமனுக்கு முன்னால் வந்து அவனோடு போர் செய்து மாண்டனர். இறுதியில் துரியோதனனின் உடன் பிறந்தவர்களுக்குள் நல்லவனாக விகர்ணன் என்னும் இளைஞன் வீமனோடு போருக்கு வந்தான். விகர்ணனின் மாசு மறுவற்ற உள்ளத்தையும் நற்பண்புகளையும் வீமன் ஏற்கெனவே அறிந்தவனாகையினால் அவனோடு போர் செய்வதற்குத் தயங்கினான். ஆனால் அவனோ கண்டிப்பாக வீமனைப் போருக்கழைத்தான்.