பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

473

காட்டச் செய்யவில்லையானால் என் பெயர் அலாயுதன் இல்லை” - என்று வீரம் பேசிக்கொண்டே களத்திற்குள் நுழைந்தான் அந்த அரக்கன். வீமனுக்கும் அவனுக்கும் போர் தொடங்கிற்று. வாய் பேசிய அளவுக்குக் கைபேசவில்லை அலாயுத அரக்கனுக்கு. வீமன் போர் புரிந்த வேகத்தில் அலாயுதனுடைய தேர் ஒடிந்தது; வில்லும் ஒடிந்தது, அம்பறாத்தூணி தூள் தூளாயிற்று. சினம் கொண்ட அந்த அரக்கன் கீழே கிடந்த பெரிய பெரிய கற்களை எடுத்து வீமன் மேல் வீசி எறிந்தான், வீமன் தன் கையிலிருந்த பெரிய கதாயுதத்தால் அந்தக் கற்களைத் தடுத்துக் கீழே தள்ளினான். தன் தந்தை அலாயுதனோடு போரிடுவதைத் தொலைவிலிருந்தே கவனித்துக் கொண்டிருந்த கடோற்க்சன் வேகமாக ஓடி வந்தான். “நீங்கள் பேசாமல் ஒதுங்கி இருங்கள். இவனை நான் கவனித்துக் கொள்கிறேன்” - என்று வீமனிடம் கூறி விட்டு அலாயுதனை எதிர்க்க முற்பட்டான் கடோற்கசன். அலாயுதனுக்கும் கடோற்கசனுக்கும் போர் ஏற்பட்டது. இருவரும் அரக்கர் இனத்தைச் சேர்ந்தவர்களாகையினால் ஒருவருக்கொருவர் சிறிதும் சளைக்காமல் தொடர்ந்து போரைச் செய்யலாயினர். முதலில் அலாயுதனுக்கு உதவியாக வந்திருந்த வீரர்கள் ஒவ்வொருவராக எமனுலகு சென்றனர். அலாயுதன் ஒருவன் தான் எஞ்சியிருந்தான். கடோற்கசன் போர்க்களத்தில் மாயாஜாலப் போர் செய்தான். தான் ஒருவனே திடீர் திடீரென்று பலப் பல உருவங்களாக மாறிக்கொண்டு, எதிரி திணறும்படி போர் செய்தான். கடைசியாக மீதமிருந்த அலாயுத அரக்கனையும் கொன்று தீர்த்தபின் கடோற்கசன் வெற்றி முழக்கம் செய்தான். இதன் பின்பும் அவனை எதிர்க்கத் துரியோதனாதியர் படைகள் கூட்டம் கூட்டமாக வந்தன. சிறிதும் மலைக்காமல் அந்தப் படைகளையும் எதிர்த்துப் போரிட்டான். விநாடிக்கு விநாடி எண்ணிலடங்காத வீரர்கள் அவன் கையில் அகப்பட்டுச் செத்துக் கொண்டிருந்தார்கள். தன் படைகளின் நடுவே புகுந்து அவற்றைக் கடோற்கசன் துவம்சம் செய்து