பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/483

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நா. பார்த்தசாரதி
481
 

கையிலிருந்த வில்லையும் தோளிலிருந்த அம்பாறாத் தூணியையும் கீழே எறிந்து விட்டான். அதே சமயத்தில் அவனைப் பழி வாங்குவதற்கென்றே வில்லும் கையுமாக நின்று கொண்டிருந்த துட்டத்துய்ம்மன் துரோணர் மார்பில் அம்புகளைச் செலுத்தி விட்டான். துரோணர் தேர்த் தட்டிலேயே ‘ஆ’ என்று அலறியவாறு விழுந்து விட்டார். சிறிது நேரத்தில் அவருடைய உயிரும் உடலிலிருந்து பிரிந்தது. கண்ணபிரானின் சூழ்ச்சி பூரணமாகச் சிறிதளவு மாறுதலுமின்றி நிறைவேறிவிட்டது. கண் இமைத்துத் திறக்கும் நேரத்திற்குள் துரோணரின் மரணச் செய்தி போர்க்களம் எங்கும் பரவி விட்டது. களத்தின் வேறோர் பகுதியில் போர் செய்து கொண்டிருந்த அசுவத்தாமனுக்கும் தந்தை இறந்த செய்தி எட்டி விட்டது. அவன் ஓடோடி வந்தான். இறந்து கிடந்த தந்தையின் உடலைக் கண்டு மனம் வெதும்பி அழுதான். தந்தையின் பாதங்களைக் கைகளால் பற்றிக் கொண்டே அழுதான்.

“அப்பா! உலகையெல்லாம் கட்டி ஆண்டு உயர்வும் புகழும் பெறவேண்டும், என்று ஆசீர்வதித்துவிட்டு உங்களிடம் வீட்டுமர் இந்தப் படைத் தலைமையை ஒப்புவித்து விட்டுச் சென்றார். நீங்களோ யாரிடமும் ஒப்புவிக்காமலே உறக்கம் எய்திவிட்டீர்கள்” என்று கண்ணீருக்கு நடுவே உருக்கமான குரலில் கதறினான். பின்பு தந்தை எப்படி இறக்க நேர்ந்தது? என்ற விவரங்களை அங்கே தனக்கருகில் இருந்தவர்களைக் கேட்டு அறிந்து கொண்டான். கண்ணனின் சூழ்ச்சியும் துட்டத்துய்ம்மனின் பழிவாங்கும் எண்ணமும் யாவற்றுக்கும் காரணம் என்று அறிந்த போது அசுவத்தாமன் ஆத்திரத்தோடு குமுறி எழுந்து விட்டான். “கண்ணபிரானின் சூழ்ச்சியால் தருமர் நான் இறந்து விட்டதாகப் பொய் சொன்னார். அந்தப் பொய்யைச் செவியுற்றதும் உண்மையாகவே நான் இறந்து விட்டதாக நம்பிய என் தந்தை திகைத்து நின்றிருக்கிறார். அவர் அப்படித் திகைத்து நிற்கும்போது துட்டத்துய்ம்மன் அம்பு எய்து

அ. கு. - 31